×

டிஎன்பிஎஸ்சி, மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 126 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் விஜய் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி-I பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 78 பேருக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 48 பேருக்கும் முதல்வர் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி-I பணிகளுக்கு 28 துணை ஆட்சியர்கள், 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 19 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 15 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் 6 உதவி ஆணையர்கள் (தொழிலாளர்) என மொத்தம் 78 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் (தொழிலாளர்) பணியிடம் முதன்முறையாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-Iல் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் மூலம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், 40 உதவி பொறியாளர்கள், 6 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் 2 நூலகர்கள் தரம்-II என மொத்தம் 48 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி-I பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 78 பேருக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 48 பேருக்கும் முதல்வர் விஜய் நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கி, அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ், தலைமை செயலாளர் சாய்குமார், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் காகர்லா உஷா, மனித வள மேலாண்மை துறை செயலாளர் சமயமூர்த்தி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் அனுராக் மிஷ்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Vijay ,TNPSC ,Pollution Control Board ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,Tamil Nadu Pollution Control Board ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து