×

நம்பியூர் அருகே தனியார் மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு

 

ஈரோடு, ஜூலை 28: நம்பியூர் அருகே தனியார் மதுபானக்கூடம் அமைக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நுகர்வோர் பாதுகாப்பு மையம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட கணேசபுரம், குமார் நகர், அருள்அவென்யூ, லக்கி நகர், சுபவேலன் நகர், அழகாபுரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் மதுபானக்கூடம் மற்றும் எலைட் பார் அமைக்கப்பட உள்ளது. குடியிருப்பு பகுதியில் தனியார் மதுபானக்கூடம் அமைத்தால், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், காமாட்சி அம்மன் திருமண மண்டபத்திற்கு வரும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும். எனவே, அப்பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்னை அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் மதுபானக்கூடம், எலைட் மதுபான பாருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு அதில் கூறி உள்ளனர். இதேபோன்று, குறிச்சியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி சந்திரன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பவானி அடுத்த சித்தாரில் இருந்து குறிச்சி செல்லும் சாலையில் உள்ள சின்ன குரும்பபாளையம் வாய்க்கால் மேட்டில் அரசு மதுபானக்கடை அமைந்துள்ளது.

இந்த மதுபான கடையை அகற்றக்கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து, மதுபானக்கடையை அகற்றக்கோரி, மூன்று முறை சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இனியும் அரசு மதுபானக்கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் சாலை மறியிலில் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

Tags : Nambiyur ,Erode ,Consumer Protection Center ,Public Grievance Redressal Day ,Erode District Collector ,Nambiyur Town Panchayat ,
× RELATED தண்ணீர் வரத்து குறைவால் களையிழந்த கொடுமுடி காவிரி ஆறு