×

ஆக.15ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்காவிட்டால் நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு

 

சென்னிமலை,ஆக.4: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வரும் ஆகஸ்டு 15ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான அறிவிப்பு வராவிட்டால் ஈரோட்டில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவது என சென்னிமலை அருகே நடந்த விவசாயிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சென்னிமலை அருகே சொக்கநாதபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு கீழ்பவானி பாசன விவசாயிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உள்ளூர் விவசாயி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். விவசாயிகள் நாராயணன், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ரவி கலந்து கொண்டு கீழ்பவானி பாசன பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சிகள் குறித்தும், ஆகஸ்டு 15ம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதின் அவசியம் குறித்தும் பேசினார். பின்னர், கீழ்பவானி பாசன பகுதிக்கு வரும் 15ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வரும் 6ம் தேதி ஈரோட்டில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை திரளான விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும், கீழ்பவானி பாசன பகுதியை காப்பாற்ற அனைத்து கிராமங்களிலும் பாசன விவசாய சங்கங்களை ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில், சொக்கநாதபாளையம், எல்லை குமாரபாளையம், மேட்டூர், ராமலிங்கபுரம், திட்டம்பாளையம், மறவபாளையம் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் கலைவாணி பாஸ்கர் நன்றி கூறினார்.

 

Tags : Water Resources Department ,Lower Bhavani canal ,Chennimalai ,Erode ,Bhavanisagar dam ,Chennimalai… ,
× RELATED தண்ணீர் வரத்து குறைவால் களையிழந்த கொடுமுடி காவிரி ஆறு