×

அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்கு செயற்கைக்கோள் விடுவதில் இந்திய இளைஞர்கள் முன்னுதாரணம்

ஜெயங்கொண்டம், மார்ச் 16: அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்கு செயற்கைக்கோள் விடுவதில் இந்தியாவின் இளைஞர்கள் முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என மங்கள்யான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மங்கள்யான் திட்ட இயக்குனரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: இன்றைக்கு கல்லூரி மாணவர்கள் தங்களது தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதே போன்று தேர்தலிலும் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கு நூறு வாக்களிப்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். வாக்களிப்பது என்பது ஒவ்வொருடைய ஜனநாயக கடமை. இதை அனைவரும் பின்பற்றி சரியான வாக்கினை பதிவு செய்தால் நாடு நன்றாக இருக்கும். இளைஞர்களின் எதிர்காலம் நாட்டின் எதிர்காலம். அதே போன்று நமது வாக்கு நமது நாட்டின் எதிர்காலம்.

இன்றைக்கு இந்திய விண்வெளித் துறை உலக அளவில் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. அதுவும் செயற்கைக்கோள்கள் என்ற கருத்தில் முதல் 3️ இடங்களில் உள்ளோம். மாணவர்களும் செயற்கைக்கோள் செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய அரசு பள்ளி மாணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது நாம் எந்த அளவுக்கு முன்னேறிச் செல்கிறோம் என்பது தெரியும். எதிர்காலங்களில் முதல் இரண்டு இடங்களுக்கு நாம் முன்னேறி செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மற்ற நாடுகளில் செயற்கைகோள் விடுவதற்கு இந்தியாவில் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் உள்ளன. அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்கு செயற்கைக்கோள் விடுவதில் இந்தியாவின் இளைஞர்கள் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு இலவசமாக வழங்கப்படுவதால் மற்ற நாடுகள் நம் நாட்டில் செயற்கைகோள் விடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் வர்த்தக ரீதியாக பல நல்ல பயன்கள் உள்ளன. இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

Tags : United States ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!