போடி: கள்ளக்காதல் விவகாரத்தில் 2 சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி ரெங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி (34). கூலித்தொழிலாளி. இவரது மகன்கள் ஸ்ரீஹரிஷ் (11), சபரீஷ் (10). ஸ்ரீஹரிஷ் 6ம் வகுப்பும், சபரீஷ் 5ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த இருவரும் திடீரென மாயமாகினர். உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சின்னத்தம்பி, இது குறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன்பேரில் எஸ்ஐ மாயாண்டி வழக்குப்பதிந்து, மாயமான சிறுவர்களை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அருகே உள்ள ஒரு பாசன கிணற்றில் சிறுவர்கள் இருவரும் சடலமாக மிதப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், போடி தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சுமார் நூறடி ஆழமுள்ள கிணற்றில் கிடந்த சிறுவர்களின் சடலங்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சின்னத்தம்பியின் உறவினரான, அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கேசவ பாலாஜி (19), இரு சிறுவர்களையும் அழைத்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து கேசவ பாலாஜியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், கேசவபாலாஜி போடி முந்தல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருவதும், கேசவ பாலாஜியின் தாயாருடன், சின்னத்தம்பிக்கு தகாத உறவு இருந்தாலும், தனது விலை உயர்ந்த செல்போனை சின்னத்தம்பியின் மகன்கள் திருடியதாலும் இருவரையும் கிணற்றில் தள்ளி கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்றிரவு கேசவ பாலாஜியை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
