×

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் சிறையிலடைப்பு

சத்தியமங்கலம்: குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொன்ற பார் ஊழியரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த லூர்து குமார் மகள் ரெபேக்கா (24). இவருக்கும் ராமேஸ்வரத்தை சேர்ந்த பாகப்பிரகாஷ் (36), என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாகப்பிரகாஷ் ராமேஸ்வரத்தில் பழக்கடை நடத்தி மதுபான பாரில் வேலை செய்து வந்தார். தம்பதியர் ராமேஸ்வரத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு பிரதீஸ்வரி (4), பிரணிதா (2), பிரகிதா (2), என 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், ரெபேக்கா கோபித்துக் கொண்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பவானிசாகரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். சில தினங்களுக்கு முன்பு வந்த பாகப்பிரகாஷ், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு ரெபேக்கா உன்னுடன் வாழ விருப்பம் இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. ரெபேக்கா தனது குழந்தைகளுடன் பவானிசாகர் அருகே உள்ள நால்ரோடு என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து பவானிசாகர் வந்த பாகப்பிரகாஷ் மனைவி ரெபேக்கா வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு ரெபேக்காவின் தந்தை லூர்துகுமார், தாய் இந்திரகுமாரி, தங்கை தாரணிகா ஆகியோர் இருந்தனர். அப்போது, அங்கு வந்த பாகப்பிரகாஷ் மனைவியை ரமேஸ்வரம் வருமாறு அழைத்தார். ஆனால், ரெபேக்கா மறுத்ததால் பாகப்பிரகாஷ் ரெபேக்காவை கத்தியால் சரமாரியாக குத்தியதில் பரிதாபமாக இறந்தார். பின்னர் தப்பியோட முயன்ற பாகப்பிரகாஷை உறவினர்கள் மடக்கி பிடித்து பவானிசாகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து கோவை மத்தி சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், ரெபெக்கா அடிக்கடி யாருடனோ செல்போனில் அதிக நேரம் பேசி வந்ததால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதும், குடும்பம் நடத்த அழைத்தும் ரெபேக்கா வர மறுத்ததும் இக்கொலைக்கு காரணம் என தெரிய வந்தது.

Tags : Sathyamangalam ,Rebekah ,Lurdu Kumar ,Sri ,Lankan ,Tamil Rehabilitation ,Camp ,Bhavanisagar, Erode District ,Rameshwarath ,
× RELATED கஞ்சா விற்பனை, மாமூல் தகராறு; புழல்...