பள்ளிப்பட்டு: காதல் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளிப்பட்டு அருகே சி.ஆர்.பட்டடை கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (27). இவர், அதே கிராமத்தை சேர்ந்த துர்கா (23) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக தனது காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம் காரணமாக, மதுபோதையில் விஜயகுமார் வரதட்சணை கேட்டு அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு வழக்கம் போல் மதுபோதையில் வீடு திரும்பிய விஜயகுமார், தனது மனைவி துர்காவை சரமாரி தாக்கி உதைத்துடன், கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மனைவி துர்கா புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் பள்ளிப்பட்டு காவல்நிலைய எஸ்ஐ சிவா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவான கணவர் விஜயகுமாரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
