சித்தோடு பேரூராட்சி பகுதியில் திமுக வேட்பாளர் முத்துசாமி தீவிர வாக்குசேகரிப்பு

ஈரோடு, மார்ச் 16:  ஈரோடு  மேற்கு தொகுதிக்குட்பட்ட சித்தோடு பேரூராட்சி பகுதியில் திமுக வேட்பாளர்  முத்துசாமி நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு மேற்கு  தொகுதிக்குட்பட்ட சித்தோடு பேரூராட்சிக்குட்பட்ட சித்தோடு, கன்னிமார்காடு,  தந்தை பெரியார்நகர், ராயபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக  வேட்பாளர் முத்துசாமி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக  சென்று நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தந்தை  பெரியார் நகரில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பஸ் போக்குவரத்து, இலவச  வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பது  குறித்தும், இது குறித்து சித்தோடு பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை  புகார் தெரிவித்தும் தீர்வு காணப்படாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேட்பாளர்  முத்துசாமியிடம் எடுத்துக்கூறினர்.

மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள்  கட்டும் பணி மந்தமாக நடந்து வருவதாகவும் கூறினர். இதற்கு பதிலளித்த  திமுக வேட்பாளர் முத்துசாமி, ‘‘தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த 100 நாட்களில்  உங்கள் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்படும்’’ என்று உறுதியளித்தார்.பின்னர் சித்தோடு நால்ரோடு, காஞ்சிக்கோவில்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடு  வீடாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து ராயபாளையம்  பகுதியில் தொழிலாளர்கள், விசைத்தறியாளர்கள், விவசாயிகள் ஆகியோரை சந்தித்து  வாக்கு சேகரித்தார். முன்னதாக சித்தோடு வந்த முத்துசாமிக்கு திமுக மற்றும்  கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

Related Stories: