×

ஜிம்பாப்வேயுடன் முதல் டி20 எளிதாக வென்றது இந்தியா

ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான முதல் டி20 போட்டியில் தொடக்க வீரர் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாக அரை சதம் விளாச, இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

பிரையன் பென்னட், பென் கரன் இணைந்து ஜிம்பாப்வே இன்னிங்சை தொடங்கினர். மயாங்க் வீசிய முதல் பந்திலேயே பென்னட் கோல்டன் டக் அவுட்டாகி நடையை கட்ட, ஜிம்பாப்வேக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. பென் 10, டியான் மையர்ஸ் 6, கேப்டன் சிக்கந்தர் 4 ரன்னில் அணிவகுக்க, அந்த அணி 7.2 ஓவரில் 32 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. பொறுப்புடன் விளையாடிய ரியான் பர்ல் 26 ரன், வெஸ்லி மாதவெரே 39 ரன் விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர்.

பிராட் எவன்ஸ் டக் அவுட்டாக, ஜிம்பாப்வே 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன் சேர்த்தது. டடிவனஷே மருமானி 27 ரன், நியூமன் நியாம்ஹுரி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் மயாங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் தலா 2, ஷிவம் துபே, ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

அபிஷேக் ஷர்மா, வைபவ் சூரியவன்ஷி இணைந்து துரத்தலை தொடங்கினர். அபிஷேக் 8 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து முஸரபானி பந்துவீச்சில் எவன்ஸ் வசம் பிடிபட்டார். எனினும், வைபவ் தனது வழக்கமான அதிரடியை காட்ட… இந்திய ஸ்கோர் மளமளவென எகிறியது. சிக்சரும் பவுண்டரியுமாகப் பறக்கவிட்ட வைபவ் 18 பந்தில் அரை சதம் அடித்துஅசத்தினார். அவர் 50 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி என்காரவா பந்துவீச்சில் கரன் வசம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இஷான் கேப்டன் ஷ்ரேயாஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்தனர். இஷான் 35 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார். இந்தியா 13.2 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்து எளிதாக வென்றது. ஷ்ரேயாஸ் 28 ரன் (24 பந்து, 3 பவுண்டரி), திலக் வர்மா 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஜிம்பாப்வே பந்துவீச்சில் முஸரபானி 2 விக்கெட், என்காரவா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய வேகம் மயாங்க் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார் (4-0-18-2). கேப்டன் ஷ்ரேயாஸ் தலைமையில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி இதே மைதானத்தில் நாளை மாலை 4.30க்கு தொடங்குகிறது.

* வைபவ் உலக சாதனை
சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனை வைபவ் சூரியவன்ஷி (15 வயது, 118 நாள்) வசமானது. அவர் மால்டா அணிக்கு எதிராக 2021ல் கிப்ரால்டரின் லூயிஸ் புரூஸ் (16 வயது, 56 நாள்) படைத்த சாதனையை நேற்று முறியடித்தார்.

Tags : India ,T20 ,Zimbabwe ,Harare ,Vaibhav Suryavanshi ,
× RELATED சீனா ஓபன் பேட்மின்டன் போராடி தோற்றார் சிந்து