×

எத்தனால் உற்பத்தி ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு; அமைச்சர்களின் கார் முன்பு மக்கள் மறியல் போராட்டம்

பவானி: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் எத்தனால் உற்பத்தி ஆலையை தடை செய்ய கோரி அமைச்சர்களின் கரை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். பவானி, அந்தியூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி, எம்எல்ஏ ஆனந்த் மோகன், கலெக்டர் கந்தசாமி ஆகியோர் நேற்று காலை அம்மாபேட்டை வந்திருந்தனர். இதனை அறிந்த பூனாச்சி, ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நத்தமேடு பிரிவில் தனியார் மரவள்ளிக்கிழங்கு, எத்தனால் உற்பத்தி ஆலையின் முன்பாக அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே காரில் வந்த அமைச்சர் செங்கோட்டையன், விஜய் பாலாஜி ஆகியோரை வழிமறித்து அமர்ந்தனர். அமைச்சர்களிடம், தனியார் ஆலை வெளியேற்றும் கழிவு நீரால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆழ்குழாய் தண்ணீர் மாசடைந்து விட்டது. ஓடையில் கழிவுநீர் கலக்கிறது. காற்று மாசடைந்து துர்நாற்றம் வீசுவதால் சுவாசக்கோளாறு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

சரும நோய்களால் சிறியவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி விடுத்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய் பாலாஜி ஆகியோர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Bhavani ,Revenue ,Minister ,Sengottaiyan ,Handloom Department… ,
× RELATED பெற்றோரை தாக்கி சிறுமி கடத்தல்: திருத்தணியில் புகார் பெற மறுப்பு