×

தமிழகத்தில் கொரோனா, வெயில் தாக்கம் அதிகரிப்பு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்க கோரிக்கை

மதுரை, மார்ச் 15: தமிழகத்தில் கொரோனா, வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட வேண்டும் என பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்தள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பின்னர் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தியதில் கடந்த ஜன.19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்.8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. தற்போது 9 முதல் 11ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு மே 3ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9, 10, 11ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சில மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும், தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி உள்ளதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘தற்போது 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள்தான் நடந்து வருகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தற்போது நேரடியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர். வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆசிரியர்களும் தேர்தல் பணிக்கு சென்று விடுகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு சென்று அழைந்து வருவது மிச்சமாக உள்ளது. அதற்கு பதிலாக கோடை விடுமுறை விட்டுவிடலாம்” என்றனர்.

Tags : Corona ,Tamil Nadu ,Weil Impact ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...