×

சபரிவர்மனிடம் 10 பாக்கெட் ஓசி சிகரெட் வாங்கிய எஸ்ஐ: தென்தாமரைக்குளம் போலீசாரையும் விசாரிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

 

கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் என்.எஸ். கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சபரிவர்மன் அவரது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 09.07.2024 அன்று காலை இவரது கடைக்கு வந்த தென்தாமரைக்குளம் உதவி ஆய்வாளர், தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடையில் வைத்து விற்பதாக கூறி ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் 10 பாக்கெட் சிகரெட் பணம் தராமல் வாங்கியவர், காவல் நிலையம் வருமாறு கூறியுள்ளார். கணவனும் மனைவியுமாக காவல் நிலையம் சென்றபோது கைபேசியை வாங்கி வைத்துவிட்டு நிலையத்தின் பிணையில் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

பின்னர், உயர் போலீஸ் அதிகாரியின் நிர்பந்தத்தின் பேரில் செல்பேசியை வாங்கிச் செல்லுமாறு திரும்ப அழைத்து சபரிவர்மனை பிடித்து வைத்து இரவு 11 மணிக்கு ரிமாண்ட் செய்து மருத்துவ பரிசோதனை நடத்தி எவ்வித காயமும் இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின்னர் நாகர்கோவில் கிளை சிறையில் அடைத்து அடித்துக்கொலை செய்து உள்ளனர். சிறையில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் சிறைக்குள்ளும், தென்தாமரைக்குளம் காவல்நிலையத்திலும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றத்திற்கு காரணமான அனைவரையும் கைது செய்து நீதியின் முன்னால் நிறுத்திடும் வகையில் நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்திட வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், கணினி பட்டதாரியான மனைவி ஆனந்தவள்ளிக்கு உடனடியாக அரசு வேலையும் வழங்கிட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : SI ,Sabarivarman ,Thenthamaraikulam ,Kanyakumari District ,Marxist ,N.S. Kannan ,Assistant Inspector ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து