புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததற்காக உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறிய நகைச்சுவை நடிகர் சமே ரெய்னா உள்ளிட்ட 5 பேருக்கு தலா 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் சமே ரெய்னா, மாற்றுத்திறனாளிகளை கேலி செய்த விவகாரம் இதுதொடர்பான வழக்கில் அவர் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளானார்.
அப்போது, தனது தவறுக்கு பிராயச்சித்தமாக மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளை விளக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தார். ஆனால், நீதிமன்றத்தில் அளித்த அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நீதிமன்றத்தை ஏமாற்றியதோடு, மாற்றுத்திறனாளிகளைத் தொடர்ந்து அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சமே ரெய்னா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
‘கியூர் எஸ்எம்ஏ பவுண்டேஷன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங், மாற்றுத்திறனாளிகளின் தொடர்பு எண்கள் இல்லாததால் அவர்களை நிகழ்ச்சிக்கு அழைக்க முடியவில்லை என்று ரெய்னா தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் அப்பட்டமான பொய் என்றும், அவர்கள் தங்களின் ஆணவப் போக்கினால் நீதிமன்றத்தை ஏமாற்ற முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் மோகனா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, நீதிமன்ற வாக்குறுதியை மீறியதற்காக சமே ரெய்னாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அப்போது நீதிபதிகள், ஆரம்பத்தில் அவருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்தனர். பின்னர் அதனை 3 லட்சம் ரூபாயாகக் குறைத்ததோடு, அவருடன் தொடர்புடைய மற்ற 4 நகைச்சுவை நடிகர்களான விபுல் கோயல், பரமஜீத் சிங் காய், சோனாலி தாக்கூர் மற்றும் நிஷாத் ஜெகதீஷ் தன்வார் ஆகியோருக்கும் தலா 3 லட்சம் ரூபாய் அபராதத்தை இரண்டு வாரங்களுக்குள் செலுத்த உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சமே ரெய்னா போன்றவர்கள் தங்களை சமூக ஊடக செல்வாக்காளர்களாகக் காட்டிக்கொண்டு நீதிமன்றத்தையே கேலி செய்வதாகத் தெரிவித்தார். இறுதியாக தலைமை நீதிபதி சூர்ய காந்த், ‘நடிகராக பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறரின் மரியாதையையும் கண்ணியத்தையும் மதிக்க பழக வேண்டும்’ என்று எச்சரித்தார்.
