×

தவெகவில் இணைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் சர்ச்சை பேச்சு ஆளுநர் அர்லேகரை சந்தித்து இன்று திமுக மீண்டும் புகார்: குதிரை பேரம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடைபெற்று வருவதாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து திமுக மீண்டும் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக அதிக இடங்களை கைப்பற்றியது. 108 தொகுதிகளை மட்டுமே தவெக பிடித்த காரணத்தால் ஆட்சி அமைக்க மேலும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை ஏற்பட்டது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது.

இந்த சூழ்நிலையில் அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என திட்டம் போட்ட அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால் இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளாத நிலையில், அந்த எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர் பதவியை நீக்கி உத்தரவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா வெய்து அண்மையில் தவெகவில் இணைந்தனர்.

இதே போல அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் மரகதம் குமாரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் பி. சத்தியபாமா ஆகியோர் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி தவெக விலைக்கு வாங்கி விட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த நிலையில், எம்ஆர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தது தொடர்பாக கூறுகையில், “தவெகவில் இருந்து எங்களை அணுகினார்கள்.அது எங்களுக்கு பிடித்திருந்தது. இதனால் தவெகவில் இணைந்து விட்டோம் என்று பேசியிருந்தார். இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் கடந்த வாரம் தமிழக ஆளுநரை திமுக, அதிமுக, பாஜகவினர் சந்தித்து தவெக அரசின் செயல்பாடுகள் தொடர்பாக புகார் அளித்திருந்தனர்.

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவையில் இல்லாத தனி நபர்கள் 2 பேர் கலந்து கொண்டதாகவும், தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திமுகவினர் மீண்டும் ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் குதிரை பேரம் மூலம் தவெகவிற்கு இழுக்கப்பட்டது தொடர்பாக புகார் தெரிவிக்க உள்ளனர்.

மேலும் தவெகவில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இணைய தங்களிடம் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் சமர்பிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே திமுகவினர் புகார் மீது தமிழக ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : DMK ,Governor Arlekar ,M.R. Vijayabaskar ,Thaweka ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Assembly elections ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து