×

பெரம்பலூர் அருகே இரூர் கல்குவாரியில் கலெக்டர் அதிரடி ஆய்வு; விதிமீறும் உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தில் உள்ள இரூர் மற்றும் நாரணமங்கலத்தில் கல் குவாரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் இரூர் கல்குவாரியில் கனிம வள விதிமுறைகள் மற்றும் அனுமதியை விட அதிக ஆழத்திற்கு கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார் வந்தது. இது தொடர்பாக கலெக்டர் ஷரண்யா அறி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கல்குவாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அவர், குவாரிகளின் தற்போதைய செயல்பாட்டு நிலை, அனுமதிக்கப்பட்ட அளவில் கற்கள் வெட்டப்பட்ட நிலை பாதுகாப்பு ஏற்பாடுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்துச் சட்ட மற்றும் விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தார். கல்குவாரிகளில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959 பிரிவு 36Aன் கீழ் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட எல்லையை மீறி கனிமங்களை வெட்டியெடுத்தல் மற்றும் கடத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களும், அனுமதிக்கப்பட்ட சர்வே எண்களில் இருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை, இணையவழியில் வழங்கப்படும் அனுப்பு சீட்டு (Despatch Slip ) மற்றும் செக்யூரிட்டி ஆவணம் அச்சிடப்பட்ட போக்குவரத்து அனுமதி சீட்டு ஆகியவற்றுடன் போக்குவரத்து செய்வதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும், எடுத்துச் செல்லப்படும் கனிமத்தின் சரியான அளவிற்கு ஏற்ப வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அனுப்பு சீட்டு மற்றும் போக்குவரத்து அனுமதி சீட்டு கட்டாயமாக இருப்பதையும், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிமங்களைக் கொண்டு செல்வதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றி கனிமங்களைக் கொண்டு செல்வது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிமங்களை எடுத்துச் செல்வது அல்லது குத்தகை வழங்கப்பட்ட எல்லைக்கு வெளியே சட்டவிரோதமாக குவாரி பணி மேற்கொள்வது போன்ற எந்தவொரு விதிமீறலும் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் மட்டுமின்றி, கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், குவாரிகளில் இருந்து வெளியேறும் கனிமங்களின் எடையைத் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில், அனைத்து குவாரி உரிமையாளர்களும் குவாரி வளாகத்திலேயே எடை மேடை (Weigh Bridge) கட்டாயமாக அமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்றும், குவாரிக்கும் கிரஷருக்கும் இடையேயான சரியான தொலைவைக் கொண்ட அனுமதிச் சீட்டினைப் பயன்படுத்த வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வு குவாரி செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன், சட்டவிரோத கனிம வெட்டியெடுத்தல் மற்றும் கடத்தலை முழுமையாகக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் அனிதா, பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் விஜயகுமாரன், உதவி புவியியலாளர் தமிமுல் அன்சாரி, ஆலத்தூர் தாசில்தார் பாக்கியராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Irur ,Perambalur ,Patalur ,Naranamangalam ,Alathur taluk ,Perambalur district ,Irur quarry ,
× RELATED நீட் சர்ச்சைக்கு நடுவே அடுத்த...