×

துளசேந்திபுரம் கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் சட்டவிரோத மண் திருட்டை தடுக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் சட்டவிரோத மண் திருட்டை தடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். ‘வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று, அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டு விற்பனை என செய்தி. கண்ணாரப்பேட்டை ஏரியில் மண் திருட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத மண் எடுப்பை தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது பதியப்பட்ட வழக்கையும் திரும்பப் பெறுக’ எனவும் டிடிவி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியைப் பயன்படுத்தி அளவுக்கு அதிகமான மண்ணை எடுத்து சட்டவிரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்தும் வகையிலும், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கத்திலும் வழங்கப்பட்ட வண்டல் மண் எடுப்புக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதனை தட்டிக் கேட்ட இளைஞர்களின் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு வகுத்துள்ள விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக இயந்திரங்கள் மூலம் இரவு, பகலாக மண் தோண்டி எடுக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததின் மூலம் இந்த சட்டவிரோதச் செயல்களுக்கு காவல்துறையும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றரா? என்ற சந்தேகம் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுர கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் நடைபெறும் மண் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்திடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, சட்டவிரோத மண் எடுப்பைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags : Tulasendipuram Kannarpet North Lake ,DTV ,Dinakaran ,Chennai ,AMUGA ,Secretary General ,TTV ,Tulasendrapuram Kannarpet North Lake ,Mannarkudi district ,Thiruvarur district ,
× RELATED வணிகக் கப்பல் மீது ஈரான் நடத்திய...