×

நீட் சர்ச்சைக்கு நடுவே அடுத்த அதிர்ச்சி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய நீட் நுழைவுத்தேர்வு: ‘நீட் – ப்ரீ ஆயுர்வேதா’ நடப்பாண்டில் அறிமுகம்: சமஸ்கிருதத்தை திணிக்க ஒன்றிய அரசு திட்டம்

நாகர்கோவில்: நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது 10ம் வகுப்பு மாணவர்களையும் ‘நீட் ப்ரீ ஆயுர்வேதா’ மூலம் நுழைவுத் தேர்வு வளையத்திற்குள் கொண்டு வரும் ஒன்றிய அரசின் புதிய முயற்சி கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மருத்துவக் கனவுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள், நீட் தேர்வு என்ற ஒற்றைத் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றன. இந்தச் சூழலில், நடப்பாண்டு நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு குளறுபடிகள் என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இதனால் மே 3ம் தேதி தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் நீட் தேர்வு எழுதிய பல மாணவர்கள் தங்கள் உயிரைமாய்த்துக்கொண்டனர்.

இத்தகைய குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை ஒட்டுமொத்தமாக சிதைந்துள்ள நிலையில், அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்னெப்போதையும் விட இப்போது நாடு முழுவதும் வலுத்துள்ளது. நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்ற சூழல் நிலவும் போது, அதற்கு நேர்மாறாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கே நீட் நுழைவுத் தேர்வு நடத்தும் புதிய நடைமுறைக்கு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய ஆயுர்வேத பல்கலைக்கழகம் தயாராகி வருகிறது.

பிளஸ் 2 முடித்த பிறகு நடத்தப்படும் நுழைவுத் தேர்வே இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் போது, தற்போது 10ம் வகுப்பு மாணவர்களையும் இத்தகைய போட்டித் தேர்வு முறைக்குள் தள்ளுவது மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் செயல் எனப் பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். இந்தத் திட்டத்தில் மற்றுமொரு சர்ச்சையாக, சமஸ்கிருதம் பயில்பவர்களுக்கு மட்டுமே இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இது மறைமுகமாகச் சமஸ்கிருத மொழியைத் திணிக்கும் முயற்சி என்றும், இதன் மூலம் கிராமப்புற மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு அடியோடு பறிக்கப்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதுடெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் இணைந்து, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக ‘நீட்-பிஏ’ (நீட் – ப்ரீ ஆயுர்வேதா) என்ற புதிய நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் முதலில் இரண்டு ஆண்டுகள் ‘ப்ரீ-ஆயுர்வேதா’ என்ற அடிப்படைப் படிப்பைப் பயில்வார்கள். இது மேல்நிலைக் கல்விக்கு இணையானதாகக் கருதப்படும். அதனைத் தொடர்ந்து நான்கரை ஆண்டுகள் பி.ஏ.எம்.எஸ் மருத்துவப் படிப்பும், இறுதியாக ஒரு ஆண்டு கால மருத்துவமனைப் பயிற்சியும் என மொத்தம் ஏழரை ஆண்டுகளில் மாணவர்கள் ஆயுர்வேத மருத்துவர் பட்டத்தைப் பெற முடியும். இதற்காக நடத்தப்படும் ‘நேஷனல் எலிஜிபிலிட்டி-கம்-என்ட்ரன்ஸ் டெஸ்ட் – ப்ரீ-ஆயுர்வேதா’ (நீட்-பிஏ) என்ற நுழைவுத் தேர்வில் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

மேலும், விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2026-ம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இத்தேர்வில் சமஸ்கிருதம், அறிவியல் மற்றும் ஆயுர்வேதம் ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களையும், எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களையும் பெற வேண்டியது அவசியமாகும்.

இப்புதிய திட்டத்திற்கான நுழைவுத் தேர்வுகள் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 30 அல்லது செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் இதர வழிகாட்டுதல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய விரும்பும் மாணவர்கள் புதுடெல்லி ஜனக்புரியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.sanskrit.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் செய்து வருகிறது. அதன் வளர்ச்சிக்கான ஒரு வடிவமாகவும் இந்த தேர்வு பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் ஏற்கனவே நீட் தேர்வால் மருத்துவக் கல்வி மாநிலங்களின் கைகளை விட்டுச் சென்றுவிட்ட நிலையில், தற்போது சமஸ்கிருதம் மற்றும் 10-ஆம் வகுப்பு அளவிலான நுழைவுத் தேர்வு என்ற பெயரில் கொண்டு வரப்படும் இந்த மாற்றங்கள் கல்வித் துறையில் சர்ச்சைகளையும், மேலும் பல சிக்கல்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்தத் திட்டத்தில் மற்றுமொரு சர்ச்சையாக, சமஸ்கிருதம் பயில்பவர்களுக்கு மட்டுமே இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

* ஆயுர்வேத ‘குருகுல கல்வி’
நீட்- பிஏ தேர்வு என்பது 10-ம் வகுப்பு முடித்தவுடன் ‘ஆயுர்வேத குருகுலங்களில்’ சேர விரும்புவோருக்கு மட்டுமே. ஒருவேளை இது கடினமாகத் தோன்றினால், மாணவர்கள் வழக்கம்போல 11, 12-ம் வகுப்புகளில் அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்துவிட்டு, பின்னர் நீட் யுஜி தேர்வு எழுதி மற்ற மருத்துவக் கல்லூரிகளில் பிஏஎம்எஸ் படிப்பில் சேரலாம். அங்குக் கல்விக் காலத்திலேயே சமஸ்கிருதம் ஒரு பாடமாகத் தனியாகக் கற்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

* சமஸ்கிருதம் கட்டாயம்
* ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை படிப்பிற்கான அடிப்படைத் தகுதியாக விளங்கும் ‘ஆயுர்வேத முன்-படிப்பு’ சேர்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் (சமஸ்கிருத கல்வி வாரியங்கள் உட்பட) 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம்.

* இத்திட்டம் மொத்தம் 7.5 ஆண்டுகளைக் கொண்டது [2 ஆண்டுகள் முன்-படிப்பு (Pre-Ayurveda) + 4.5 ஆண்டுகள் இளநிலை படிப்பு (B.A.M.S) + 1 ஆண்டு கட்டாயப் பயிற்சி (Internship)]. இத்தேர்வு 150 நிமிடங்கள் (இரண்டரை மணி நேரம்) நடைபெறும். இது ஓஎம்ஆர் தாள் அடிப்படையிலான ‘ஆப்லைன்’ தேர்வாகும். மொத்தம் 120 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண் வீதம் மொத்தம் 120 மதிப்பெண்கள். தவறான பதில்களுக்கு கழித்தல் மதிப்பெண்கள் கிடையாது.

* மாணவர்கள் தங்களின் வசதிக்கேற்ப சமஸ்கிருதம், ஹிந்தி அல்லது ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து எழுதலாம். இத்தேர்வு மூன்று பகுதிகளைக் கொண்டது, பகுதி ஏ: சமஸ்கிருதம் (இலக்கணம் மற்றும் இலக்கியம்)

பகுதி பி: அறிவியல் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) மற்றும் கணிதம். பகுதி சி: ஆயுர்வேதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் மற்றும் வரலாறு. விண்ணப்பப் பதிவு ஜூலை 2026 மூன்றாவது வாரத்தில் தொடங்கும்.

Tags : NEET ,Union government ,Nagercoil ,
× RELATED பெரம்பலூர் அருகே இரூர் கல்குவாரியில்...