×

ரயில் டிக்கெட்டின் செல்போன் ‘ஸ்கிரீன்ஷாட்’ செல்லாது: பகல் கொள்ளை என்று பயணிகள் அதிருப்தி

புதுடெல்லி: செல்போனில் வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் ரயில் டிக்கெட் நகல்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்டுகள் பயணத்திற்கு செல்லாது என்று ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ெதன் கிழக்கு மத்திய ரயில்வே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பயணிகள் வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட டிக்கெட்டைக் காட்டுவது ஏற்கப்படாது; ரயில்வே விதிகளைத் தெரிந்திருப்பது அவசியம்! ‘ரெயில்ஒன்’ செயலி மூலம் பதிவு செய்யப்படும் முன்பதிவில்லா டிக்கெட்டுகள், எந்த செல்போனில் இருந்து பதிவு செய்யப்பட்டதோ அந்த பதிவு செய்யப்பட்ட அசல் செல்போனில் மட்டுமே செல்லுபடியாகும்; அத்துடன் பயணத்தின் போது அசல் செல்போனுடன் புகைப்பட அடையாள அட்டையையும் வைத்திருப்பது கட்டாயம்; மாறாக வாட்ஸ்அப் நகல், ஸ்கிரீன்ஷாட் அல்லது பிற வழிகளில் பெறப்படும் டிக்கெட்டுகள் செல்லாது’ என்று தெரிவித்துள்ளது.

ரயில்வேயின் இந்த புதிய அறிவிப்புக்கு பயணிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து பயணி ஒருவர் சமூக வலைதளத்தில், ‘நான் எனது குடும்பத்தினருக்காக ஆன்லைனில் டிக்கெட்டுகளை பதிவு செய்கிறேன், அதற்குரிய அடையாள அட்டையும் எங்களிடம் உள்ளது, இதற்கு மேல் என்ன வேண்டும்? இது ஒரு பகல்கொள்ளை’ என்று சாடியுள்ளார். மேலும் மற்றொரு பயணி, ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை குறிப்பிட்டு, ‘வயதானவர்கள் மற்றும் பலருக்கு இது போன்ற செயலிகளை பயன்படுத்த தெரியாது, நான் எனது குடும்பத்தினருக்கு டிக்கெட் எடுத்துவிட்டு அவர்களுடன் பயணிக்காத பட்சத்தில், எனது செல்போனையும் அவர்களிடம் கொடுத்து அனுப்ப வேண்டுமா, எல்லாரும் பயன்படுத்தும் வகையில் விதிகளை எளிய முறையில் உருவாக்குங்கள்’ என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags : New Delhi ,Railways ,WhatsApp ,East Central Railway ,
× RELATED வியட்நாமில் படகு விபத்தில் இறந்தோர்...