மும்பை: தனது உடல் பருமன் குறித்து படத்தில் இடம்பெற்ற கேலி கிண்டல்களுக்கு இந்தி நடிகை அஞ்சலி ஆனந்த் துணிச்சலுடன் விளக்கமளித்துள்ளார்.பிரபல இயக்குனர் கரண் ஜோகரின் ‘ராகி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த நடிகை அஞ்சலி ஆனந்த், தற்போது ‘தமால் 4’ படத்தில் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசரில் அஞ்சலி ஆனந்தின் உடல் எடையை கிண்டல் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து அவர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ‘நான் இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக குரல் கொடுப்பவராக இருந்தும், ஏன் இந்த கதாபாத்திரத்தில் நடித்தாய் என்று மக்கள் கேட்கிறார்கள்; ஆனால் நான் எனது திறமையை நிரூபித்த பிறகும் சமூக வலைதளங்களில் பலர் என்னை எருமை மாடு என்று கேலி செய்து கொடூரமாக விமர்சித்து வருகிறார்கள்; நிஜ வாழ்க்கையில் மற்றவர்களைக் கேலி செய்வதை நிறுத்தும்போதுதான், சினிமாவிலும் அதுபோன்ற காட்சிகள் மாறுபடும்; இந்த வம்பான முறையை மாற்றி, அசிங்கப்படும் கதாபாத்திரமாக இல்லாமல், ‘பாரோ’ என்ற ஒரு வலுவான பெண்ணாகவே இதில் நடித்துள்ளேன்; கதையின் தேவைக்காகவே இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.
