11.7.2026 – சனி கூர்ம ஜெயந்தி
பகவான் மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான `கூர்ம’ (ஆமை) அவதாரம் எடுத்த திருநாளே கூர்ம ஜெயந்தி ஆகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, மந்தர மலையைத் தாங்க விஷ்ணு பகவான் ஆமை உருவம் (கூர்மம்) எடுத்தார். இந்த நாளில் இவரை வழிபடுவது வாழ்வில் நிலையான தன்மை, பலம் மற்றும் தடைகளைத் தாங்கும் உறுதியைத் தரும். பக்தர்கள் விரதம் மேற்கொண்டு மாலையில் பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கூர்மநாதசுவாமி கோயில், கூர்ம ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கியத் தலமாகும்.
12.7.2026 – ஞாயிறு மாத சிவராத்திரி, பிரதோஷம்
இன்று சிவனுக்குரிய சிவராத்திரி மற்றும் பிரதோஷம். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் வருவதை மாத சிவராத்திரி என்கிறோம். இந்த விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து, சகல வளங்களும் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். மாத சிவராத்திரியில் சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும், நந்தி தேவரையும் வழிபட வேண்டும். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால், பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து விடும். இதில் பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்த நேரத்தில் எல்லா சிவன் கோயிலிலும் சிவலிங்கத் திருமேனிக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இந்த அபிஷேக ஆராதனையை கண்ணாரத் தரிசித்தாலே இதுவரை இருந்த காரியத் தடைகள் அனைத்தும் விலகும்.
14.7.2026 – செவ்வாய் அமாவாசை
இன்று அமாவாசை. முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். நம்மைக் காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள்.
15.7.2026 – புதன் வாராஹி நவராத்திரி ஆரம்பம்
ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். ஆனி – ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக் கெடுக்கின்ற காலம். பூமித் தாயே சூல்கொண்டு, பயிர்கள் கருக் கொள்கின்ற காலம். ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி, வாராஹி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. இந்த நாளில் செய்யும் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே சித்திக்கும் என்கிறது பிரமாண்ட புராணம். வாராஹி அன்னை கைகளில் ஏர்க் கலப்பையும் உலக்கையும் கொண்டு காட்சி தருகிறாள். இதுவே இவள் உழவுத் தொழிலைக் காத்து அருள்பவள் என்பதன் அடையாளம்.
அதனால்தான் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பெரிய கோயிலில் வாராஹி அன்னைக்குத் தனிசந்நதி கண்டு வழிபட்டான் ராஜராஜன். தஞ்சைப் பெரிய கோயிலில் இப்போதும் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு இந்த நாள்களில் நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்கும அலங்காரம் எனத் தினமும் ஒரு பொருளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.
16.7.2026 – வியாழன் புரி ஜெகன்நாதர் ரத யாத்திரை
புரி, ஒடிசா மாநிலத்தில் அமைந்திருக்கும் புண்ணிய நகரம். `‘புருஷோத்தம க்ஷேத்திரம் புரி ஜகந்நாதம்’’ என்று புராணங்களால் போற்றப்படும் அற்புதத்தலம். இந்திரத்துய்மன் என்கிற மன்னன் பூவுலகில் பகவான் விஷ்ணுவுக்கு மாபெரும் ஆலயம் ஒன்றை அமைக்க விரும்பியபோது, பகவான் கிருஷ்ணரே சிற்பியாக வந்து இங்குள்ள ஆலயத்தையும் கருவறை தெய்வங்களையும் வடித்தார் என்கிறார்கள். 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஜகந்நாதர் ஆலயத்தில் பாலபத்திரர் (பலராமர்), ஜகந்நாதர் (மகாவிஷ்ணு), சுபத்ரா (ஸ்ரீ கிருஷ்ணரின் தங்கை) ஆகியோர் மூலவர்களாக அருள்பாலிக்கின்றனர். இவர்களோடு பகவானின் சுதர்சன சக்கரமும் இங்கு வழிபடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆஷாடமாதத்தின் வளர்பிறையின் இரண்டாம் நாள் இந்த ரத யாத்திரை தொடங்கும். இதற்கென ஒவ்வோர் ஆண்டும் புதிய தேர்கள் செய்யப்படுவது வழக்கம்.
ஆண்டுதோறும் 4-5 லட்சம் யாத்ரீகர்கள் தரிசிக்கிறார்கள். தேரில் உள்ள சிலைகளை தரிசனம் செய்ய இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிக அளவில் குவிவார்கள். ரத தெய்வதரிசனம் செய்பவர்களுக்கு ஒரு வருடம் செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
16.7.2026 – வியாழன் மதுரை மீனாட்சி முளைக்கொட்டு உற்சவம்
ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயப் பணிகளை மேற்கொள்வர். விளை நிலைங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து இறைவனை வழிபடுவார்கள். அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக் கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது. நல்ல மழை பெய்து நாடெல்லாம் செழிக்க வேண்டிய பிராத்தனை உற்சவம் இது. மீனாட்சி அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை இரு வேளைகளில் வீதியில் உலா வரும் போது சிறப்பு நாதஸ்வரம் கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசையுடன் அம்மனை சேர்த்தி சேர்ப்பர். தினசரியும் அம்மன் அன்னம், காமதேனு, யானை, ரிஷபம், கிளி வாகனத்தில் எழுந்தருள்வார். 7வது நாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். 8ஆம் நாள் குதிரை, 9ஆம் நாள் இந்திர விமானம், 10ஆம் நாள் கனக தண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.
17.7.2026 – வெள்ளி ஆடி மாதப் பிறப்பு
ஆடிமாதம் முதல் நாள் தெற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் சூரியன், ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்களுக்குத் தென்திசையில் பயணிக்கிறார். எனவே இது தட்சிணாயன காலமாகும். ஆடி மாதம் தேவர்களின் இரவு காலத்தின் தொடக்கம் என்பார்கள். திருவெள்ளறை, திருக்குடந்தை முதலிய சில வைணவத் தலங்களில் ஆடி மாதம் ஒன்றாம் தேதி வடக்குப் பக்கம் உள்ள உத்தராயண வாசலை மூடிவிட்டு சுவாமி தரிசனத்திற்காக தட்சிணாயன வாசலைத் திறந்து வைப்பார்கள். ஆடி மாதம் முதல் நாள் மாலை இந்த வாசல் வழியாக பெருமாளை தரிசனம் செய்வது மிகப்பெரிய சிறப்பு. இந்த ஆடி மாதம், சூரியனுக்குரிய ஞாயிற்றுக் கிழமையில், சதுர்த்தியில், சதய நட்சத்திரத்தில், ஆரம்பமாகிறது. “ஆடி செவ்வாய் தேடிக்குளி” என்பார்கள். ஆடியில், செவ்வாய்க் கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும்.
ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தை கடைப் பிடிப்பார்கள். எல்லா பண்டிகைகளும் ஆடி மாதத்தில் இருந்துதான் தொடங்கும்.
ஆடி மாத பிறப்பன்று வீட்டை சுத்தப்படுத்தி வாசலில் நீர் தெளித்து பெரிய கோலமாக போட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து மங்கள விளக்குகளை ஏற்ற வேண்டும். வண்ண மலர்களை பகவானுக்கு சூட்டி பல நிவேதனங்களை படைத்து பூஜை செய்ய வேண்டும். தேங்காயை உடைத்து அதை உரலில் இட்டு ஆட்டி எடுப்பதால் அதற்கு ஆடிப் பால் என்று பெயர். புதுமணத் தம்பதிகளுக்கு இந்த பாலை கொடுக்கக்கூடிய வைபவமும் ஆடி மாதத்தில் பல குடும்பங்களில் நடக்கும்.
17.7.2026 – வெள்ளி ஆடி முதல்வெள்ளி
ஆடி மாதம் வழிபாட்டுக்கு அதுவும் பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரிய சிறந்த மாதம். அதிலும் ஆடி வெள்ளிக் கிழமை மிகமிக விசேஷம். சந்திரனும் மகாலட்சுமியும் பாற்கடலில் தோன்றியவர்கள். சந்திர சகோதரி என்று மகாலட்சுமியைச் சொல்வார்கள். சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசிக்கு உரிய மாதம்தான் ஆடி மாதம். சந்திரன் உச்சம் பெறுகின்ற ரிஷப ராசிக்கு உரிய சுக்கிரன்தான் வெள்ளிக் கிழமைக்கு உரியவர். எனவே ஆடி மாதம் வெள்ளிக் கிழமை என்பது மகாலட்சுமியின் அனுக்கிரகத்தைப் பெற்றுத்தருகின்ற நாள். அதிலும் முதல் வெள்ளி மிக விசேஷம். இம்மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடை பெறுவது வழக்கம்.
ஆடி வெள்ளியன்று, பெண்கள் விரதம் இருப்பது ஐதீகம். இதனை சுக்கிரவார விரதம் என்று கூறுவர். ஆடி வெள்ளிக் கிழமை விரதம் இருப்பதால், கிரக தோஷங்களால் வருகின்ற பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். அத்துடன் கடன் பிரச்னைகள் தீர்வதற்கான வழி உண்டாகும். நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் விரைவில் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமணத் தடை நீங்கி மங்கல காரியங்கள் சிறப்பாக நடக்கும். அன்று அனேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தாயார் மூலவருக்கு திருமஞ்சனம் நடக்கும். உற்சவருக்கு மாலை நேரத்தில் கண்ணாடி அறை சேவை நடைபெறும்.
பிரகார புறப்பாடு நடந்து தாயாருக்கும் பெருமாளுக்கும் மாலை மாற்றுதல் நடைபெறும். ஸ்ரீ ரங்கத்தில் ஆடி கடைசி வெள்ளியன்று தாயாருக்கு விசேஷமான ஒய்யார நடை சேவை நடைபெறும். அன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை தரிசிப்பதால், எல்லா சுப பலன்களும் கூடும். பெருமாள் அனுக்கிரகம் பூரணமாகக் கிடைக்கும்.
