×

அக்னி சாட்சி என்பது என்ன?

?சனிக்கிழமையில் பிறந்த சிம்ம ராசியினருக்கு சனி சங்கடம் தருமா?
– வண்ணை கணேசன், சென்னை.
இது முற்றிலும் தவறான கருத்து. சனிக்கிழமையில் பிறந்தவர்களுக்கு சனியின் ஆதிக்கம் இருக்கும் என்று இவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன் என்பதாலும் சனியும் சூரியனும் எதிரிகள் என்பதாலும் இதுபோன்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. பிறந்த கிழமைக்கும் ஜனன ராசிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஒவ்வொரு லக்னத்திற்கும் பாதகாதிபதி என்ற ஒரு அமைப்பு உண்டு. அதுவும் ஜென்ம லக்னத்தின் அடிப்படையில்தானே அன்றி ஜென்ம ராசியின் அடிப்படையில் அல்ல. ஆக சனிக்கிழமையில் எந்த ராசியினர் பிறந்தாலும் எந்த ஒரு கிரஹத்தாலும் சங்கடம் என்பது உண்டாகாது. அவரவர் ஜாதக அமைப்பிற்கு ஏற்றவாறுதான் பலன் என்பது உண்டாகும்.
?மனிதருக்கு பிறப்பும் இறப்பும் எப்படி ஏற்படுகிறது?
– சு. பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.
புனரபி ஜனனம் புனரபி மரணம் என்கிறார் ஆதிசங்கரர். கடலில் உள்ள நீர் சூரிய வெப்பத்தின் காரணமாக ஆவியாகி மேலே சென்று மேகமாகி அது குளிர்ந்து மழையாய் மீண்டும் நீராகக் கடலுக்கே வந்து சேர்வதைப் போல இவ்வுலகில் உள்ள ஜீவ ராசிகள் மரணமடைந்து விண்ணுலகம் சென்று தங்கள் கர்மவினைக்கு ஏற்றாற்போல் மீண்டும் இந்த பூவுலகில் வந்து அவதரிக்கின்றன. இதுதான் இந்த பிரபஞ்சத்தின் விதி. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை பஞ்சபூதங்களின் தொடர்பு உண்டு. இந்த பூவுலகில் மனிதனாகப் பிறந்து நிலத்தில் வசிக்கிறான். இறந்த பின்பு அவனது உடலை நெருப்பில் இடுகிறார்கள். எலும்புத்துண்டுகளுடன் கூடிய அந்த சாம்பலை அஸ்தி என்ற பெயரிலே நீரிலே கரைக்கிறார்கள். அந்த நீரானது ஆவியாகி அதாவது காற்றின் மூலமாக ஆகாயத்திற்கு செல்கிறது. அங்கிருந்து மழையாக மீண்டும் இந்த நிலத்திற்கே வந்து சேர்கிறது. குறிப்பிட்ட அந்த மனிதனின் மூலக்கூறு அடங்கிய நீரானது அவனது குடும்பத்திலேயே சென்று சேர்கிறது. அதனால்தான் பிறந்த குழந்தையைப் பார்த்து அப்படியே எங்க அப்பாவே வந்து பிறந்திருக்கிறார், எங்க அம்மா ஜாடை அப்படியே இருக்கு என்றெல்லாம் சொல்லி பிரமிக்கிறோம். இது அனைத்தும் இந்த பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்களின் வாயிலாக இறைவனால் நடத்தப்படுகின்ற நாடகமே ஆகும். நாம் அனைவரும் அந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் என்றால் அது மிகையில்லை.
?ஜாதகம், எண்கணிதம் முதலான பல்வேறு கணிப்புகளையும் தாண்டி நிகழும் சோதனையிலிருந்து விடுபட ஒழுக்கமும் பக்தியும் போதும்தானே?
– ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை.
நிச்சயமாக. எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் ஒழுக்கத்திலிருந்து வழுவாமல் உண்மையான பக்தியோடு இறைவனிடத்தில் சரண் அடைபவர்களை ஆண்டவன் என்றுமே கைவிடுவதில்லை. கர்மபலனின் காரணமாக நாம் அனுபவிக்கும் சோதனைகளை தாங்கக் கூடிய வலிமையையும் அதனை எளிதாகக் கடந்து செல்லும் திறனையும் இந்த ஒழுக்கமும் பக்தியும் தந்துவிடுகிறது.
?வேண்டுதலை நிறைவேற்றா விட்டால் தெய்வம் தண்டிக்குமா?
– த. நேரு, வெண்கரும்பூர்.
தெய்வம் தண்டிக்கும் என்று சொல்வதை விட நமது மனசாட்சி என்பது உறுத்திக்கொண்டே இருக்கும் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். எந்த தெய்வமும் நம்மிடத்தில் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. நாமாகத்தான் ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று வேண்டுதலை முன் வைக்கிறோம். அது நிறைவேறியதும் வேண்டுதலை நிறைவேற்றாமல் விட்டுவிடுகிறோம். இறைவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது எல்லாம் சிரத்தையுடன் கூடிய பக்தியைத்தான். நம்மால் எதைச் செய்ய இயலுமோ அதை மட்டுமே நாம் வேண்டிக் கொள்ள வேண்டும். அதேபோல் அடுத்தவர்களுக்காக நாம் வேண்டிக் கொள்வதும் தவறு. என் பிள்ளைக்கு கல்லூரியில் இடம் கிடைத்தால் அவனுக்கு மொட்டை போடுகிறேன் என்று நாம் வேண்டிக் கொள்ளக் கூடாது. கல்லூரிக்குச் செல்லும் பிள்ளை மொட்டை போட்டுக்கொள்வதற்கு விரும்பவில்லை எனும்போது நம்முடைய வேண்டுதலை நம்மால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுகிறது. அந்தப்பிள்ளை கவனக்குறைவாக கீழே விழுந்தால் கூட நமது மனம் நாம் வேண்டுதலை நிறைவேற்றாததால்தான் இப்படி நடந்துவிட்டது என்று எண்ணி அச்சம் கொள்கிறது. வேண்டுதலை நிறைவேற்றுதல் என்பது சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றுவதற்கு சமம். கண்டிப்பாக அதனை நிறைவேற்றியே தீர வேண்டும். இல்லாவிட்டால் வாக்கு தவறிய பாவம் என்பது வந்து சேருமே தவிர தெய்வம் தண்டிக்கும் என்று சொல்வது தவறு.
?அக்னி சாட்சி என்பது என்ன?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இந்து மதத்தில் நடத்தப்படும் அனைத்து சடங்குகளுக்கும் அக்னியே சாட்சி ஆகும். அக்னிக்கு முன்னால் நின்றுகொண்டு ஒரு உறுதிமொழி சொல்லப்பட்டால் அதை கடைப்பிடித்தே ஆக வேண்டும். இந்தச் சடங்கு பிரதானமாக திருமணத்தில் இடம் பிடிக்கிறது. பெண்ணைப் பெற்றவர் தனது மகளை அக்னி சாட்சியாய் ஒரு ஆணுக்கு கன்யாதானம் செய்து கொடுக்கிறார். அந்த ஆண்மகனும் அதே அக்னியை சாட்சியாகக் கொண்டு அந்தப் பெண்ணின் கரத்தினைப் பற்றி காலம் முழுவதும் நீயும் நானும் இணைபிரியாமல் மனம் ஒருமித்து வாழவேண்டும் என்ற உறுதிமொழியை கூறுகிறான். இவ்வாறு எடுக்கப்படும் உறுதிமொழியை மணமக்கள் இருவரும் தாங்கள் உயிருடன் இருக்கும் வரை காப்பாற்ற வேண்டும் என்பதே நமது தர்மம் வலியுறுத்தும் கருத்து. சாதாரணமாக கற்பூரத்தை ஏற்றி வைத்து சத்தியம் செய்வதும் இதன் அடிப்படையில்தான். அதாவது அக்னியை சாட்சியாக வைத்து சத்தியம் செய்கிறேன் என்பதுதான் அதன் பொருள். அக்னி சாட்சியை விட வேறு பெரிய சாட்சி இந்த உலகத்தில் இல்லை என்பதே நமது சனாதன தர்மம் உணர்த்தும் உண்மை.
?ஆடிமாதம் பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்று கூறுகிறார்களே, இது உண்மையா?
– ஜெ.மணிகண்டன், வேலூர்.
ஆடி மாதம் மட்டுமல்ல, எந்த மாதமாக இருந்தாலும் சரி, குடும்பத்தில் பெண்குழந்தை பிறந்தால் அது அதிர்ஷ்டம்தான். மகாலட்சுமியே வந்து பொறந்துட்டா என்று சொல்வதும் இதன் அடிப்படையில்தான். பெண்குழந்தைகள் என்றாலே அவர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்பதைத்தான் நமது தர்மம் வலியுறுத்திச் சொல்கிறது.
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும்.
ஏன் எதற்கு எப்படி? தினகரன், ஆன்மிக மலர் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை – 600 004.

Tags : Saturn ,Simma Rasians ,Vannai Ganesan ,Chennai ,Sun ,Simma Rasi ,
× RELATED இந்த வார விசேஷங்கள்