×

பிந்துமாதவப் பெருமாள்

புலியாக மாறிய அசுரன்
பிரத்தூத்தன் என்னும் கொடூர அசுரன், மக்களை துன்புறுத்தியும், முனிவர்கள் செய்யும் வேள்விகளில் மாமிச துண்டுகளையிட்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டான். ஒருகட்டத்தில் பொறுத்துக் கொள்ளமுடியாது, ரோமரிஷி என்னும் மாமுனிவரிடத்தில்;
“சுவாமி… முனிவர்கள் செய்யும் பூஜை, யாகங்களை பிரத்தூத்தன் என்னும் கந்தர்வன், தடுத்து கலைக்கிறான். மேலும், மக்களையும் அச்சுறுத்துகிறான். இவனின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு தாங்கள்தான் முடிவு கட்ட வேண்டும்’’ என்று முறையிட்டனர்.
“ஆஹாஹா… எம் முனிவர்களையும் மக்களையும் எவன் துன்புறுத்துவது? எவனாக இருந்தாலும் சரி, அவன் புலியாக மாறட்டும்’’ என்று ரோமரிஷி சபித்துவிடுகிறார். மறுநொடியே.. பிரத்தூத்தன் புலி ரூபத்தில் மாறினான். நாட்கள் செல்ல, ஒரு நாள்… “சுவாமி… சுவாமி…’’ என்று அலறியடித்துக் கொண்டு முனிவர்களும், மக்களும் மீண்டும் ரோமரிஷியை சந்தித்தனர். அவர்களை பார்த்த ரோமரிஷி;
“என்னது! ஏன் பலரது உடம்பில் ரத்தம் வழிந்தோடுகிறது?’’ என்று ரோமரிஷி ஆச்சரியத்தோடு வினவினார்.
“நீங்கள், பிரத்தூத்தனை புலியாக மாற்றினீர்கள் அல்லவா… இப்போது புலி ரூபத்தில் இருக்கும் பிரத்தூத்தன், எங்களை மீண்டும் தாக்குகிறான். இதில் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிலர் மரணித்தும் போய்விட்டார்கள். இரண்டு பச்ச குழந்தையையும் கிழித்து உண்டு விட்டான். புலியாக மாறியும் அவனின் குணம் மாறவில்லை. நீங்கள்தான் இதற்கு ஒரு தீர்வினை தரவேண்டும்’’ என்று மன்றாடி கேட்டனர். இவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு, இந்திரதேவனிடம் முடிவுக்கட்ட, ரோமரிஷி சென்றார்.
பிரத்தூத்தனின் பெயரில் கிராமம்
ரோமரிஷி கேட்டுக் கொண்டதன் படி, புலி வடிவில் இருக்கும் பிரத்தூத்தனை அழிக்க எவ்வளவோ முயற்சித்தும், இந்திரனால் அழிக்க முடியவில்லை. ஆகையால், அனைவரும் மஹாவிஷ்ணுவை நாடினர். கடும் அட்டகாசங்களை செய்துவந்த பிரத்தூத்தனை வதம் செய்தார். சாகும் தருவாயிலில் இருக்கும் பிரத்தூத்தன்;
“இறைவா… பெருமானே… எனது முப்பிறவியின் வினைப்பயனாக, இப்பிறவியில் நான் அசுரனாக பிறந்தேன். உமது திருக்கரங்களினாலே பாவ விமோசனமும் அடைந்தேன். நன்றி.. இறைவா..! இருப்பிலும், எனது இரண்டு ஆசைகளை கடைசியாக நிறைவேற்றித் தரவேண்டும்’’ என்று வேண்டிக் கொள்ள;
“பிரத்தூத்தனே… உனது ஆசைகளை கேள்’’ என்றார் மஹாவிஷ்ணு.
“பலருக்கும் காட்சி கொடுத்த உன் விஸ்வரூபத்தை எனக்கும் காட்சி அளிக்க வேண்டும்’’ என்றுகூறிய அடுத்த நொடி, “இந்த கிராமம் எனது பெயரில் அழைக்கப்பட வேண்டும்’’ என்று தனது இன்னொரு ஆசையையும் கேட்டான், பிரத்தூத்தன்.
உடனே மகாவிஷ்ணு, விஸ்வரூபத்தை பிரத்தூத்தனுக்காக எடுத்தார். அவனின் கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
“இன்று முதல் இந்த இடம் `பிரதூத்தப்பட்டு’ என்றே அழைக்கப்படும்’’ என்று மகாவிஷ்ணுகூறி மறைந்தார். தற்போது, பிரதூத்தப்பட்டு என்று இருந்த இந்த கிராமத்தின் பெயர் மருவி `துத்திப்பட்டு’ என்றாகிவிட்டது. பிரத்தூத்தனுக்கு காட்சி கொடுத்த இடத்தில், ஸ்ரீ குமுதவல்லி, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத, ஸ்ரீ பிந்துமாதவர் எழுந்தருளினார் என்கிறது ஸ்தல வரலாறு!
இந்த ஆலயம், சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆலயமாக கருதப்படுகிறது. மூலவரான பிந்துமாதவப் பெருமாள், மூலஸ்தானத்தில் 7அடி உயரத்தில், மிக கம்பீரமாக வீற்றிருக்கிறார். மேலும், பூமிக்கு கீழே சுமார் 15 அடியில் ஆழம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாகர்கள் விசேஷம்
வெள்ளிக் கிழமை அன்று காலை: 07:00 மணி முதல் 11:00 மணிக்குள், நாகர்களுக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள் – குங்குமம் இட்டு, புதுவஸ்திரம் சாற்றி நிவேதனம் செய்து, தொடர்ந்து ஒன்பது வாரம் வழிபட்டு வந்தால், திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் குழந்தைப்பேறு கிடைக்க வேண்டுவோருக்கு, அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. இவை இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
ஒருநாள் திருப்பதி
திருமலா திருப்பதியில் வேங்கடவனுக்கு, சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம் போன்றவைகள் நடைபெறுகிறதோ.. அதே போல் இவ்வாலயத்தில், பங்குனி உத்திரம் அன்று ஒரே ஒரு நாள் மட்டும் திருமலா திருப்பதியில் இருந்து பட்டர்களை (அர்ச்சகர்கள்) வரவழைக்கப்பட்டு, சுவாமிக்கு சுப்ரபாதம் சேவை தொடக்கி, திருக்கல்யாணம் வரை சிறப்பாக நடைபெறும். அன்றைய தினத்தில் திரளான பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்வார்கள். அப்போது திருப்பதி லட்டு, வடை ஆகியவை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.
மழலை வரங்கள்
சில ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் ஆன ஒரு தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு கிட்டவில்லை. ஆகையால், மனைவியின் சம்மதத்தோடு இன்னொரு திருமணத்தை செய்துக் கொண்டார். இரண்டு மனைவிமார்களும் குழந்தை இல்லாமல் வருந்தினார்கள். தொடர்ந்து பிந்துமாதவப் பெருமாளை தரிசித்து வந்த தம்பதிகள், தினமும் பெருமாளை தரிசனம் செய்ய ஏதுவாக, கோயிலின் பின்புறத்தில் இடம் ஒன்றை வாங்கினார்கள். இடம் வாங்கிய நேரம், இரண்டு மனைவிகளுக்கும் குழந்தை பாக்கியம் உண்டானது. குழந்தையும் பிறந்தது. இதில் மகிழ்ந்த தம்பதிகள், 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், ஆலய திருப்பணிகளை மேற்கொண்டு, ஆலயத்தை மேம்படுத்தினர். இன்றும் அவர் களின் வாரிசுகள் உள்ளனர். அவர்கள், ஆலயத்தின் ஏதோவொரு பணிகளை மேற்கொள்கிறார்கள்.
அதன் பிறகு கடந்த 2007-ஆம் ஆண்டு, மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தாண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. விரைவில் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.
பணமே வேண்டாம்
பிந்துமாதவப் பெருமாளின் வியக்க வைக்கும் அதிசயத்தை, கோயில் நிர்வாகிகளுள் ஒருவரான என்.பாபு சுப்பிரமணி ஐயர் கூறியதாவது; ஸ்வாமிக்கு தேர் செய்ய முடிவு செய்திருந்தோம். அதற்காக, தேக்கு மரம் தேவைப்பட்டது. மரத்தை தேடி சென்னை முதல் குமரி வரை அலைந்தோம். கடைசியாக, ஒரு இஸ்லாமியர் அன்பர்மூலமாக ஆந்திர மாநிலம் சிக்மல்லாபுரம் என்னும் இடத்தில், தேருக்கு தேவையான தேக்கு மரங்கள் கிடைத்தன. மரங்கள் அனைத்தும் எதிர்பார்த்தபடி மிக கச்சிதமாக, தேர் செய்ய ஏதுவாக இருந்தன. மரங்களை லாரியில் ஏற்றி துத்திப்பட்டுக்கு கொண்டுவந்துவிட்டோம். வேலையும் நல்ல படியாக முடிந்தது. பேசியதுபடி, அந்த இஸ்லாமிய அன்பருக்கு பணம் கொடுக்க வேண்டும். பணத்தை பெற கோயிலுக்கு வந்தார், இஸ்லாமிய அன்பர். நேராக எங்களிடம்;
“ஐயா.. எனக்கு ஒரு ஆசை.. பிந்துமாதவர் சாமியை நான் பார்க்க வேண்டும்’’ என்று தன் ஆசையை சொன்னார். மறுப்பேச்சு பேசாது;
“அதற்கென்ன பார்க்கலாமே..!’’ என மூலவரை சேவிக்க அழைத்து சென்றோம். கண் குளிர பிந்துமாதவப் பெருமாளை தரிசித்த இஸ்லாமிய அன்பர், வெளியே வந்தார். அவர் கண்கள் முழுவதும் கண்ணீர் வழிந்தோடின.
“பிந்துமாதவப் பெருமாளின் உருவம் எவ்வளவு பெரியது!’’ என்று ஆச்சரியப்பட்ட அவர்;
“எனக்கு கமிஷன் பணம் எதுவும் வேண்டாம்’’ என்றபடி கண்களை துடைத்துக் கொண்டு, “பெருமாளை பார்த்த திருப்தியே போதும்’’ என்றுகூறி அந்த இஸ்லாமிய அன்பர் சென்றுவிட்டார். இந்த நிகழ்வு, இன்றும் எங்களுக்கெல்லாம் அதிசயமாக இருக்கிறது’’ என்று பாபு சுப்ரமணியின் கண்களில் கண்ணீர் தேங்கின, நம் கண்களிலும்!
மத்வ மக்கள்
முன்னொரு காலத்தில், துத்திப்பட்டு அக்ரஹாரத்தில் ஏராளமான மத்வ சம்ரதாய மக்கள் வாழ்ந்துள்ளார்கள். மத்வர்களே ஒரு காலத்தில், இந்த ஆலயத்தில் பூஜை செய்ததால், இந்த பெருமாளுக்கு “பிந்துமாதவப் பெருமாள்’’ என்ற பெயர் உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. (பொதுவாக பிந்துமாதவன் என்கின்ற பெயர் மத்வ சம்ரதாய (கன்னடம் பேசும் அந்தணர்கள் மக்களிடையே பார்க்க முடியும்)
பிற சந்நதிகள் மற்றும் பிரசாதங்கள்
பிந்துமாதவப் பெருமாள் தவிர, லட்சுமி நரசிம்மர், ஹயக்கிரீவர், குமுதவள்ளி தாயார், விஷ்ணு துர்க்கை, ஆண்டாள், சக்கரத்தாழ்வார், அனுமன், நாகர் ஆகிய சந்நதிகளும் உள்ளன. மேலும், இவ்வாலயத்தில் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை ஆகியவை பிரதான பிரசாதங்கள்.
விழாக்கள்
இந்த ஆலயம் அருகில், சென்னப்ப மலை என்கின்ற ஒரு மலை உள்ளது. இங்கு, காணும் பொங்கல் அன்று ரோமரிஷி தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. அதனைப் பொருட்டு, காணும் பொங்கல் அன்று, பிந்துமாதவஸ்வாமி புறப்பாடு நடைபெறும். காலை: 5:00 மணிக்கு தொடங்கி, ஏழு வீதிகளில் புறப்பாடு நடைபெறும். இறுதியில், ரோமரிஷிக்கு காட்சி தருவதற்காக, சென்னப்ப மலைக்கு ஸ்வாமி எழுந்தருள்வார். அங்கு ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பூஜைகள் சமயத்தில், வானத்தில் கருடன் இருமுறை வட்டமிடுவார். இதனை பக்தர்கள் பரவசத்துடன் கண்டுகளிப்பர். அதே போல், வைகுண்ட ஏகாதசி அன்று, காலை 03:00 மணிக்கே ஆலயத்தில்
பக்தர்களின் வருகை ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் முழுவதும் விழாக் கோலமாக இருக்கும். மேலும், புரட்டாசி ஐந்து சனிக் கிழமைகளிலும், விசேஷ பூஜைகள் நடைபெற்று, அன்றைய தினம் மாலையில் உற்சவரின் புறப்பாடும் நடைபெறும்.
அதே போல், வைகாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம், தை மாதம் தாயாருக்கு திருக்கல்யாணம், ஆடிப்பூரம், வரலட்சுமி பூஜை, ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சத்யநாராயண பூஜை ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. கைங்கரியம் தொடர்புக்கு: என். பாபு சுப்பிரமணி ஐயர் – 9486052011.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 6:30 – 11:00, மாலை: 5:30 – 8:00 வரை.
எப்படி செல்வது? ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து, பேர்ணாம்பேட் செல்லும் பேருந்தில் பயணிக்க வேண்டும். துத்திப்பட்டு நிறுத்தத்தில் இறங்கவேண்டும். ஆம்பூரில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் துத்திப்பட்டு உள்ளது. ஆம்பூரில் இருந்து ஷேர் ஆட்டோவும் செல்கிறது.

Tags : Bindumadhava Perumal ,Prathutha ,Romarishi ,Swami… ,Gandharva Prathutha ,
× RELATED இந்த வார விசேஷங்கள்