×

அங்காளம்மன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம்

தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், மயான கொள்ளை விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள்(10ம் தேதி) காலை பூமிதி திருவிழா, 11ம் தேதி பொங்கல் வைத்தல் நடந்தது. நேற்று(12ம் தேதி) காலை 10 மணிக்கு ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து கோயிலை அடைந்தனர். அங்கு, அம்மனுக்கு பாலாபிஷேகத்தை தொடர்ந்து, இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானத்துடன் இரவு 1 மணிக்கு முகவெட்டு ஊர்வலம் நடந்தது. இன்று(13ம் தேதி) பகல் 11.30 மணிக்கு மயான கொள்ளை நடக்கிறது. நாளை(14ம் தேதி) பல்லக்கு உற்சவமும், 15ம் தேதி பிள்ளைபாவு மற்றும் கும்பபூஜையுடன் கொடியிறக்கமும் நடக்கிறது.

இதேபோல், தர்மபுரி டவுன் வெளிப்பேட்டை தெருவில் உள்ள அங்காளம்மன் கோயிலில், மயான கொள்ளை பெருவிழாவை முன்னிட்டு  நேற்று காலை 9 மணிக்கு மேல் தாய் வீட்டார் சீர்வரிசை தட்டு அழைப்பும், மதியம் 1.30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணமும், அன்னதானமும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று(13ம் தேதி) அதிகாலை 1 மணிக்கு பஞ்ச முகவெட்டு விழாவும், காலை 6 மணிக்கு பூங்கரகமும் நடக்கிறது. காலை 11.30 மணிக்கு அம்மன் பூத வாகனத்தில் மயானம் செல்லும் வைபவமும், மாலை வாண வேடிக்கையும், மயான அலங்காரத்துடன் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. நாளை(14ம் தேதி) அதிகாலை சாந்தி அபிஷேகம் நடக்கிறது. 15ம் தேதி(திங்கட்கிழமை) காலை அபிஷேகமும், இரவு 7 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பிள்ளைபாவு உற்சவம் நடக்கிறது. 17ம் தேதி(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் கொடி இறக்குதல் மற்றும் கும்பபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : Tirukkalyana ,Angalamman temples ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில்...