கோவில்பட்டி: தமிழகம் முழுவதும் மானாவாரி விவசாயிகள் கோடை உழவு செய்வதற்கு அரசு வழங்கி வந்த மானியம், இந்தாண்டு இதுவரை வழங்கப்படவில்லை. முந்தைய அரசுகள் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே வழங்கி வந்த மானிய தொகை இதுவரை வழங்கப்படாததால் மாநிலம் முழுக்க லட்சக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 56 லட்சத்து 41 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் பருவமழையை மட்டுமே ஆதாரமாக கொண்டு பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள், பயறு வகைகள், பணப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், மூலிகை வித்துக்கள் போன்ற பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. முந்தைய காலங்களில் நிலங்களில் விளைந்த திரட்சியான கதிர்மணிகளை பாதுகாத்து அவற்றையே விதைகளாக பயன்படுத்தினர். வீடுகளில் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் சாணங்களை உரமாக பயன்படுத்தினர்.
காலப்போக்கில் செயற்கை உரங்களான ரசாயன உரங்களை அடி உரமாகவும், நாட்டு ரக விதைகளுக்கு பதிலாக அதிக விளைச்சலை தரக்கூடிய வீரிய ஒட்டுரக விதைகளையும், கால்நடைகள் வளர்ப்பு குறைந்ததால் டிராக்டர்கள் மூலமும் உழவில் ஈடுபட்டு வருகின்றனர். விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, களை பறிப்பு மருந்து, ஊட்டச்சத்து மருந்து என புதிய தொழில்நுட்பங்கள் மூலமே தற்போதும் விவசாயம் செய்யப்படுகிறது.
இதனால் ஏக்கருக்கு கோடை உழவு முதல் பருவ உழவு வரை மற்றும் பயிர் பராமரிப்பு என வரம்பு மீறி செலவுகள் ஏற்படுகிறது. இதை விவசாயிகளால் சமாளிக்க முடியாமல் மானாவாரி நிலங்கள் பல இடங்களில் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு மானாவாரி விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், நீடித்த மானாவாரி இயக்கம் என்னும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், மானாவாரி விவசாய நிலங்களில் கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மழையை மட்டுமே நம்பியிருக்கும் மானாவாரி விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு, அவர்களின் வயல்களை கோடை உழவு செய்ய மானியம் வழங்கி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதே கோடை உழவு மானியத் திட்டத்தின் நோக்கமாகும்.
கோடை உழவு செய்வதன் மூலம் கோடை மழை, தென்மேற்கு பருவமழை பெய்யும் போது, மழைநீர் நிலத்தில் தேங்குவதால், மண்ணின் வளம் அதிகரிக்கும். இதன் மூலமாக மானாவாரி சாகுபடி பெருகும். கோடை உழவு செய்வதினால், மண்ணின் மேற்பரப்பில் உள்ள கடினப்பகுதி உடைக்கப்பட்டு, மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும், களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளின் எஞ்சியிருக்கும் நஞ்சு சிதைவுற்று மண்ணுக்கு பாதிப்பில்லாமல் பாதுகாக்கப்படுகிறது.
அதேபோல், மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்கள், பூச்சிகள் அவற்றின் முட்டைகள், பூஞ்சாணம் மற்றும் நோயை பரப்பக் கூடிய பாக்டீரியாக்கள், நூல் புழுக்கள் அனைத்தும் முழுமையாக மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது என்பதால் லட்சக்கணக்கான மானாவாரி விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்று வந்தனர். தமிழ்நாடு அரசின் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கோடை உழவு மானியத் திட்டத்தின் கீழ் மானாவாரி விவசாய நிலங்களில் கோடை உழவு செய்வதற்காக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்படுகிறது.
மானாவாரி விவசாய நிலத்தில் கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றிற்கு 50 சதவீதம் மானியமாக, ரூ.800 முதல் ரூ.1,250 வரை அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த தொகை மாவட்டங்களின் தன்மைக்கேற்ப மாறுபடும். இந்த திட்டத்தின் கீழ், ஒரு விவசாயி குறைந்தபட்சமாக ஒரு ஏக்கர் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை உழவு செய்து மானியம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு மானியம் வழங்குதலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் வழங்கப்படும் மானியமானது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே செலுத்தப்படுவதால், இடைத்தரகர்கள் யாரும் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடமே பணம் சேர்ந்து விடும் என்பதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விவசாயிகள் இத்திட்டத்தினால் பயன்பெற்று வந்தனர். இடையில் சிறிதுகாலம் இத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு கடல்பாசி உரம், இயற்கை உரம் வழங்கப்பட்டது.
பின்னர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கோடை உழவு மானியத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விவசாயிகள் வங்கிக் கணக்கிற்கு மானியத்தொகையை அரசு விடுவித்து வந்தது. ஆனால் புதிதாக பொறுப்பேற்ற அரசு, ஜூலை மாத முதல் வாரம் முடிந்து விட்ட நிலையிலும் கோடை உழவு செய்ய விவசாயிகளிடம் எவ்வித விண்ணப்பம் பெறவோ, இதுகுறித்த அறிவிப்போ வெளியிடவில்லை.
அதிகாரிகள் முந்தைய அரசு, கோடை கால உழவிற்கு வழங்கிய மானியம் குறித்து முதல்வரிடமோ, துறை அமைச்சரிடமோ எடுத்துக் கூறவில்லை. இதனால் மாநிலம் முழுக்க லட்சக்கணக்கான விவசாயிகள் கோடை உழவு மானியம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து உள்ளனர். மேலும் கடந்த காலங்களில் அரசு ஏக்கருக்கு வழங்கிய உழவு மானியத்தை விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
