நன்றி குங்குமம் தோழி
திருமணம் நிச்சயமானதும் மணமக்கள் இருவரும் முதலில் யோசிப்பது கல்யாண விசேஷ நாட்களில் என்ன உடை அணியலாம் என்பதுதான். இதில் மாப்பிள்ளை, மணப்பெண்ணும் ஒரே நிறத்தில் உடையினை அணியவே விரும்புகிறார்கள். அதிலும் தங்களின் உடை பிரத்யேகமாகவும் பிரமாண்டமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கல்யாணத்தில் நகைகளுக்கு அடுத்து முக்கிய செலவு உடைக்கானதுதான்.
ஆனால், அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் உடையினை அன்று சில மணி நேரம்தான் அணிகிறார்கள். அதன் பிறகு அந்த உடையினை அவர்கள் அணிவதில்லை. எல்லாவற்றையும் விட அந்த உடைகளை பாதுகாப்பது மிகப்பெரிய டாஸ்க் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கெல்லாம் ஒரு தீர்வினை வழங்கி வருகிறார் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த ராகவி. இவர் ‘கவிஸ் கௌன்ஸ்’ என்ற பெயரில் பொட்டிக் ஒன்றை நிர்வகித்து வருகிறார். குறிப்பாக மணமகன் மற்றும் மணமகளுக்கான திருமண உடைகளை குறைந்த விலையில் வாடகைக்கு தருகிறார்.
‘‘சீர்காழிதான் எனக்கு சொந்த ஊர். உயர் படிப்புக்காக சென்னைக்கு வந்தேன். படிப்பு முடித்த பிறகு ஐ.டியில் வேலை. கொரோனா நேரத்தில் திருமணம் நிச்சயமானதால், ரொம்ப சிம்பிளாதான் திருமணம் நடந்தது. அதன் பிறகு நாங்க சென்னையிலேயே செட்டில் ஆயிட்டோம். எனக்கு என்னுடைய திருமணம் நல்ல கிராண்டாக செய்யணும்னு விருப்பம் இருந்தது. வரவேற்புக்கு நல்ல அழகான கவுன் போன்ற உடை அணிய விரும்பினேன்.
ஆனால், அது எல்லாம் சாத்தியமில்லாமல் போனது. நிலைமை சரியானதும் அட்லீஸ்ட் நல்ல கிராண்ட் உடை அணிந்து போட்டோ ஷூட்டாவது செய்யலாம்னு திட்டமிட்டேன். கடைக்கு வாங்கப் போனால் ஒவ்வொரு உடையின் விலையை கேட்டதும் மலைச்சு போயிட்டேன். சில மணி நேரத்திற்கு இவ்வளவு விலை கொடுத்து வாங்கணுமானு நினைச்சேன். சரி, வாடகைக்கு கிடைக்குமானு பார்த்தேன். அது சரியா வரலை. ஆண்களுக்கு நிறைய இருக்கு. பெண்களுக்கு அவ்வளவாக டிசைன்கள் இல்லை. பிறகு என்னிடம் இருக்கும் ஆடைகளை வைத்தே அழகான கவுன் ஒன்றை தைத்து போஸ்ட் வெட்டிங் ஃபோட்டோ ஷூட் எடுத்தோம்.
இது போன்ற உடைகள் குறிப்பா போட்டோ ஷூட்டிற்காகத்தான் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு அந்த உடையை யாரும் சீண்டுவதில்லை. மேலும், என்னைப் போல் பல பெண்களுக்கும் அப்படி ஒரு உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தணும்னு விருப்பம் இருக்கும் என்று நினைத்தேன். அந்த எண்ணம்தான் உடைகளை வாடகை விடலாம் என்ற எண்ணத்தை கொடுத்தது’’ என்றவர், 2021ல் வீட்டில் வைத்துதான் தன் வேலையை துவக்கியுள்ளார்.
‘‘எனக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தெரியாது என்பதால் படிப்படியாக கற்றுக் கொண்டேன். நானே ஆடைகளை உடுத்தி போஸ்ட் போட ஆரம்பித்தேன். ஆனால், அதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. முதலில் எல்லா நிறங்களிலும் கலெக் ஷன்ஸ் வைத்திருந்தேன். பின்பு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆடைகளை வாங்கினேன்.
போஸ்ட் மற்றும் ப்ரீ வெட்டிங் உடைகள், மேட்சிங் ஜோடி உடைகள், பிறந்த நாள் விழாக்களுக்கான ஒரே தீம் கலர் ஆடைகள், கர்ப்ப கால போட்டோஷூட் ஆடைகள் என தனித்தனிப் பிரிவாக விற்பனை செய்ய முடிவெடுத்தேன். ஆனால், எங்கிருந்து தொடங்குவதென்பது தெரியவில்லை. எனக்கும் தையல் பற்றி தெரியாது. அதனால் எனக்கு தெரிந்த ஃபேஷன் டிசைனர்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களிடம் உதவியை நாடினேன். அவர்களிடம் துணிகளை கொடுத்து தைக்க சொன்னேன். சில உடைகளை அவர்களே வடிவமைத்து தைத்துக் கொடுத்தார்கள். ஆனாலும், நான் நினைத்தபடி ஆடைகள் தயார் ஆகவில்லை.
பிறகு இது தொடர்பாக இணையத்தில் தேடினேன். வட இந்தியாவில் சில தொடர்புகள் கிடைத்தன. அவர்களிடம் என் விருப்பத்தை தெரிவித்து அவர்களிடம் இருந்து உடைகளை வாங்கினேன். ஆனால், அவர்களிடம் பல்வேறு அளவுகளில் கிடைக்கவில்லை. அதனால் அதே போலவே நான் பல்வேறு அளவுகளில் நிறங்களில் இங்கிருக்கும் ஆட்களை வைத்து தயார் செய்து வாடகைக்கு கொடுத்தேன். அதன் பிறகு படிப்படியாக ஆர்டர்கள் வர ஆரம்பித்தன’’ என்றவருக்கு இந்த பிசினஸ் பற்றி நன்கு புரியவே ஒரு வருடமானது.
‘‘எனக்கு உடைகள் சார்ந்த தொழிலில் எந்தவித அனுபவமும் கிடையாது. அது பற்றி புரிந்து கொள்ளவே ஒரு வருடமானது. கொஞ்சம் முதலீடும் தேவைப்பட்டது. ஆரம்பத்தில் என் வீட்டில்தான் செய்து வந்தேன். ஆர்டர்கள் வரத் துவங்கியதும், வீட்டில் இடமில்லை. அதனால் கடை அமைத்தேன். என்னிடம் ரூ.8000 முதல் ரூ.999 வரை பெண்களுக்கான திருமணம், பிறந்த நாள், கர்ப்ப கால அனைத்து உடைகளும் உள்ளது. ஆண்களுக்கும் கோட் சூட் கிடைக்கும். பெண்களுக்கு சாதாரண கவுன் முதல் நன்கு வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடைகளும் உள்ளன. மேலும், ஆடைகளுக்கு ஏற்ற நகைகள் மற்றும் அசெசரிஸ்களும் கிடைக்கும்.
தேவைப்படுவோருக்கு விழாவிற்கு ஒருநாள் முன்னரே கொரியர் செய்து விடுவோம். பயன்படுத்திவிட்டு திரும்ப அதே கூரியர் கவரில் எங்களுக்கு திருப்பி அனுப்பிட வேண்டும். ஆடைகளை வாடகைக்கு கொடுப்பதால் அதை மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கிறோம். ஒருவர் திரும்பி கொடுத்தவுடன் அதனை நன்கு துவைத்து சுத்தமாக வைத்திடுவோம். அதற்காக தனி வீடு ஒன்றை வாடகை எடுத்து, ஆட்களையும் நியமித்திருக்கிறோம்.
‘‘உடைகளை பொறுத்தவரை லேட்டஸ்ட் டிரெண்ட் மிகவும் முக்கியம். சிலர் அவர்களுக்குப் பிடித்த டிசைன்களை காண்பித்து கேட்பார்கள். துணிகளை வாடகை விடும் பிசினஸ் தானே என்று பலர் நினைப்பார்கள். ஆனால், அதில் பல பிரச்னைகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் ஆடைகளை கிழித்தும் கரைகளோடும் தருவார்கள். சில உடைகளில் நெருப்பு பட்டிருக்கும். நாங்கள் டெபாசிட் தொகையும் அதிகம் பெறுவதில்லை. அதனால் இது போன்ற சமயத்தில் அது எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.
ஒரு சமயம் ஆந்திராவிலிருந்து கும்பலாக ஆடைகளை எடுத்து சென்றார்கள். அவர்கள் அதை திருப்பி தரவில்லை. அதனால் அடையாள சான்றிதழ் இல்லாமல் நாங்க உடைகளை தருவதில்லை. சில வாடிக்கையாளர்கள் நடந்த தவறுகளுக்கு பொறுப்பேற்று அதற்கான கட்டணத்தை தருவார்கள். ஒரு சிலர் அந்த ஆடையினை அவர்களே வாங்கிக் கொள்வார்கள். சிலர் வாக்குவாதம் செய்வார்கள். இப்படி பல சவால்களை இந்த பிசினஸில் சந்திக்க வேண்டும்.
எங்களின் தனித்துவம் வெரைட்டி உடைகள்தான். கவுன்கள் மட்டுமே 500க்கும் மேற்பட்ட டிசைன்களில் உள்ளன. ஃபோட்டோ ஷூட்டிற்கான பிரத்யேக உடைகள் எங்களிடம்தான் அதிகம் உள்ளதுன்னு பெருமையாக சொல்ல முடியும். ஆரம்பத்தில் கவுன்கள் மட்டுமே வாடகைக்கு கொடுத்து வந்தோம். வாடிக்ைகயாளர்கள் பிரைடல் ஆடைகளை கேட்டதால் ஒரு வருடம் முன்பு அதனையும் அறிமுகம் செய்தோம். சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுதும் ஆந்திரா, கர்நாடகாவிலும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எங்கள் வாடிக்கையாளர்கள் சொல்லும் ‘தரம்’ என்ற ஒற்றை வார்த்தைதான் என்னை இன்று வரை ஊக்குவித்து வருகிறது’’ என்கிறார் ராகவி.
தொகுப்பு: கலைச்செல்வி
