நன்றி குங்குமம் தோழி
“என்னடி வந்ததுல இருந்தே டல்லா இருக்க… முகமே சரியில்ல… ஏதாவது பிரச்னையா” என்றாள் ராதிகா.கல்யாண மண்டபத்தில் மெதுவாக கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது. எங்கள் ஃபிரெண்ட் மதுவின் தங்கைக்கு கல்யாணம். நாங்கள் ஐந்து பேரும் சில வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் சந்திக்கப் போகிறோம். கல்லூரியில் கூட எங்கள் கேங்கை ‘பைவ் ஸ்டார்’ என்றுதான் அழைப்பார்கள்.நேரில்தான் பார்த்துக் கொள்ளவில்லையே தவிர தொழில்நுட்பத்தின் உதவியில் தொடர்பில்தான் இருக்கிறோம். ராதிகா பெங்களூரிலேயே இருந்ததால் முதலில் வந்துவிட்டாள். நான் சென்னை. இன்று காலையில்தான் வந்திருக்கிறேன். மற்ற இருவரும் மும்பை. மதியம் வந்து விடுவார்கள். இரவு ரிசப்ஷன் முடித்து விட்டு நாளை காலை திருமணம் முடிந்தவுடன் கிளம்புவதாக திட்டம்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல… ஹஸ்பெண்ட் காலையில ரீச் ஆனவுடனே போன் பண்றேன்னு சொன்னாரு… ஆனா, இன்னும் போன் வரல… அதான்.”“இதெல்லாம் ஒரு பிரச்னையா… எந்த ஊருக்கு போயிருக்காரு…”“கோயம்புத்தூர். ரெண்டு பேரும் சென்ட்ரலுக்கு ஒன்னாதான் வந்தோம்…’’“மணி எட்டுதானடி ஆச்சு… ஆபீஸ் விஷயமா போனதால ஒரு வேளை வேலையில பிஸியாகியிருப்பாரு… இல்ல போன டயர்ட்ல படுத்து தூங்கி இருக்கலாம்… கொஞ்சம் வெயிட் பண்ணி பாரு…”“சரி…” என்று தலையை ஆட்டினேன். நேற்று டாக்சியில் வரும் போது உப்பு பெறாத விஷயத்திற்கு சண்டை போட்டிருக்க வேண்டாம்… அவன்தான் முதலில் தேவையில்லாமல் அப்பாவை பற்றி மட்டமாக பேசினான்.
நானும் பதிலுக்கு அவன் குடும்பத்தை கொஞ்சமாய் வம்புக்கு இழுத்தேன். அதற்கு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால் நான் எப்படி பொறுப்பாக முடியும். ஆனாலும், இந்த பாழாய் போன மனது அவன் பத்திரமாய் போய் சேர்ந்தானா என உறுதி செய்து கொள்ள துடிக்கிறது. கடைசியில் அவன் சமாதானமாக பேச வந்த வேளையில் தேவை இல்லாமல் என் ஈகோவை காட்டி, ‘‘எங்கயாவது போய் தொலைங்க’’ என்று அவன் முகத்தில் அறைவது மாதிரி பேசியதை தவிர்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அதனால்தான் வேண்டுமென்றே என்னை சீண்ட வேண்டும் என்பதற்காக கூப்பிடாமல் இருக்கிறான் என நினைக்கிறேன்.
வெகு நாட்களுக்குப் பிறகு தோழிகளை பார்க்க வந்து சந்தோஷமாக இருப்பதை விட்டு விட்டு தேவையில்லாமல் எதற்கு மனதை போட்டு அலட்டிக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அவனே போன் செய்யட்டும் என்று கீழே மணப்பெண்ணை பார்க்க ராதிகாவுடன் கிளம்பினேன்மணப்பெண்ணை பார்த்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு மதுவிடம் பழைய கதைகள் பேசிக் கொண்டிருந்தோம். மனது எதிலும் லயிக்கவில்லை. தன்முனைப்பை ஒரு ஓரமாக வைத்து விட்டு அவனுக்கு போன் செய்ய என் கைப்பையை திறந்த போதுதான் கவனித்தேன்.போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. ‘ச்சே..!’ கிளம்புகிற அவசரத்தில் சார்ஜரை மறந்திருக்கிறேன்.
“ராதிகா உன்கிட்ட சார்ஜர் இருக்கா… போன்ல பேட்டரி செத்துப்போயிருச்சு…”“ஏண்டி… நீ சுவிட்ச் ஆப் பண்ண போன வச்சுக்கிட்டு அந்த மனுசன் ஒரு போன் பண்ணலன்னு காலையில இருந்து விடாம புலம்பிருக்க… அவரும் இப்ப உன்னை மாதிரிதான யோசிச்சிட்டு இருப்பாரு. இந்தா சீக்கிரம் சார்ஜ் போட்டு பேசு…”ஆமாம்ல… ஒருவேளை அவனும் போன் செய்து பார்த்து நான் ரீச்சபிள் இல்லையென்று தோன்றிய மாத்திரத்தில் அவசரமாக சார்ஜ் போட எழுந்தேன். பட்டென ஒரு சத்தம். மடியில் இருந்த போனை கவனிக்காமல் எழுந்ததில் கீழே விழுந்த மொபைல் இரண்டு பாகங்களாகி பல்லை இளித்தது.
ஏனோ இன்று நேரமே சரியில்லை. காலையில் ரயில் நிலையத்தில் இருந்து வந்து இறக்கி விட்ட ஆட்டோக்காரனின் அநியாய பேரத்தில் ஆரம்பித்ததில் குறைந்தது மன நிம்மதி. ராதிகாவிடம் போனை கடன் வாங்கி போன் செய்தேன். ரிங் போய்க் கொண்டே இருக்க யாரும் எடுக்கவேயில்லை. இரண்டு, மூன்று முறை தொடர்ந்து முயற்சி செய்தும் எந்தப் பலனும் இல்லை. அநேகமாய் தெரியாத நம்பர் என்பதால் எடுக்காமல் இருந்திருக்கலாம்.
உடனே வாட்ஸ் அப்பில் இருந்து நான்தான் அழைக்கிறேன் என்று ஒரு செய்தியும் கொடுத்தேன். இப்போதும் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அந்த செய்தியை பார்க்கவும் இல்லை. அலுவலக மீட்டிங்கில் இருப்பான் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.சரியாக ஒரு மணி நேரம் கழித்து அவனிடம் இருந்து போன் என்று ராதிகா அழைத்ததும் கொஞ்சம் நிம்மதியானது.
“ஹலோ… இப்பதான் மெசேஜ் பாத்தீங்களா..?”“யாரும்மா நீங்க… இந்த போன் வெச்சுருந்தவருக்கு நீங்க என்ன வேணும்” என்றது ஒரு கட்டைக் குரல்…“நீ… நீங்க யா… யாரு..?”“நான் பி 1 ஸ்டேஷன் கான்ஸ்டபிள் பேசறேன். நீங்க யாரும்மா..?”“நான் அவரோட வொய்ஃப் சார்… அவருக்கு என்ன ஆச்சு..?”“அப்படியா…” என்று சிறிது இடைவெளி விட்டார். “நான் சொல்றதை கொஞ்சம் பதட்டப்படாம கேளுங்கம்மா… அவருக்கு காலையில ரயில்வே ஸ்டேஷன் எதிர்ல ஒரு ஆக்சிடென்ட். நீங்க உடனே கிளம்பி கோயம்புத்தூர் ஜீ எச்சுக்கு வாங்க…”“எ… என்ன சொல்றீங்க…” கரகரவென உலகம் தட்டாமாலை ஆட தலை சுற்ற ஆரம்பித்தது.
கண் முழித்த போது நாங்கள் காரில் போய்க் கொண்டிருந்தோம். என்னருகே கவலையுடன் ராதிகா அமர்ந்திருந்தாள். அவளை பார்த்தவுடன் கண்களில் இருந்து கண்ணீர் அருவி மாதிரி கொட்ட ஆரம்பித்தது.என்னை ஆதூரமாய் அணைத்துக் கொண்டவள், “ஒண்ணும் ஆகாது… பயப்படாத… ஹி வில் பி ஆல்ரைட். என்னோட அங்கிள் அங்க கமிஷ்னரா இருக்கார். நான் அவருக்கு தகவல் சொல்லிட்டேன். அவரு இந்நேரம் ஸ்பாட்டுக்கு போயிருப்பார்” என்று அவள் பேசி முடிக்கும் முன்பே போன் வந்தது.
“சொல்லுங்க அங்கிள்’’ என்றவள், கவனமாய் ‘ம்’ கொட்டியவள், ‘‘அது ஒண்ணும் பிரச்னையில்ல… ஷி இஸ் ஆல் ரைட் நொவ்… நான் அங்க ரீச் ஆனதும் உங்கள கூப்பிடறேன்” என்றாள்.“என்னடி என்ன சொன்னார். அவரு சேப்தான… ஒண்ணும் பிரச்னை இல்லயில்ல…” கேட்கும் போதே உடல் பதட்டத்தில் நடுங்கியது. “அ… அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நம்ம ப்ரேயார்ஸ் நிச்சயமா அவரை காப்பாத்திடும்… நீ எதுக்கும் வொர்ரி பண்ணாத…”“என்னடி சொல்ற… அங்கிள் என்ன சொன்னார்… ஏதாவது சீரியசா… எதுவா இருந்தாலும் தயவு செய்து மறைக்காம சொல்லுடி… ப்ளீஸ்’’ என்றேன் கேஷ்வலாக.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல… நாங்க எல்லாம் உன் கூட இருக்கோம்… மத்தவங்களும் கல்யாணம் முடிச்சிட்டு நாளைக்கு வந்துருவாங்க. மீன் வைல் ஏதாவது பிரைவேட் ஹாஸ்பிட்டல் மாத்த முடியுமான்னு கேட்டிருக்கேன்… ஆக்சிடென்ட் கேஸுங்கறதுனால என்ன பண்ண முடியும்னு பாக்கலாம்னு அங்கிள் சொல்லி இருக்கார். அதுக்குள்ள இவரும் ஐசியூ விட்டு வெளிய வந்துருவார்…”“என்னது ஐசியூல இருக்காரா…” மீண்டும் மயங்கப்போன என்னை கைத்தாங்கலாக பிடித்து தண்ணீர் குடிக்க வைத்தாள் ராதிகா. கூடவே தூக்க மாத்திரை கலந்திருப்பாள் என நினைக்கிறேன். தூக்கம் கண்ணை சுழற்ற ஆரம்பித்தது.
இந்த பனிரெண்டு வருடத்தில் ஒருமுறை கூட அவன் என்னை கல்யாணம் செய்து கொண்டதற்கு வருந்தியதாக குறை கூறியதில்லை. ஆனால், நானோ அவனை சீண்ட வேண்டுமென்று ‘உங்கள கல்யாணம் பண்ணி என்ன சுகம் கண்டேன்’ என்று எத்தனையோ முறை புலம்பியிருக்கிறேன். எப்போது சண்டை போட்டாலும் ஈகோவில்லாமல் நான் சாப்பிட வேண்டுமென்று அவனே வலிய வந்து சாரி கேட்டு சண்டையை முடிப்பான்.
சின்னச் சின்ன குறைகளை கண்டுகொள்ளாமல், என் ஆசைகளை எதிர்கொள்ள முடியாமல் தீர்த்து வைக்க பற்றாக்குறை பட்ஜெட்டுடன் மல்லுக்கட்டுவான். கடவுளே! எனக்கு அவனை முழுதாக திருப்பிக் கொடுத்து விடு… இன்னும் சிந்தனைகள் கடிவாளமற்று அலைந்து கொண்டிருக்கையிலேயே சுலபமாய் தூங்கிப் போனேன் “ஹாஸ்பிடல் வந்துட்டோம்’’ என்று சத்தத்தில் சுயநினைவுக்கு வந்தவள் ஏறக்குறைய பைத்தியக்காரி மாதிரி கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடினேன். என்னை கட்டுப்படுத்துவது நிச்சயமாக ராதிகாவிற்கு கடினமாக இருந்திருக்கக் கூடும். ராதிகாவின் அங்கிள் பெயருக்கு அங்கு நிறையவே செல்வாக்கு இருந்தது.
அருகில் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை. தூரத்தில் இருந்து பார்க்கிற போது உடம்பு நிறைய கட்டுக்கள். முகம் பார்க்க எவ்வளோ கெஞ்சியும் காலையில் டாக்டரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள்.என்னை அழைத்து அவனின் பெயர், வயது, மெடிக்கல் ஹிஸ்டரி இன்ன பிற விவரங்களை வாங்கிக் கொண்டார்கள்
நேரம் பார்த்தேன். மணி பதினொன்று.ராதிகா சாப்பிட்டு எனக்கும் ஏதோ பார்சல் வாங்கி வந்தவள் கட்டாயப்படுத்தி என்னையும் சாப்பிட வைக்க போராடினாள். நான் தீவிரமாக மறுத்து விட்டேன். அவரின் முகம் பார்க்காமல் எதுவும் சாப்பிடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.
ராதிகா மட்டும் சலிக்காமல் யார் யாருடனோ போன் பேசி அடுத்து என்ன செய்யலாமென்று விவாதித்துக் கொண்டிருந்தாள். அவள் மட்டும் இன்று என் கூட இல்லையென்றால் நினைக்கவே பயமாக இருந்தது.கொட்ட கொட்ட இரவு முழுவதும் விழித்துக் கொண்டிருந்தோம். காலையில் ஆறு மணி இருக்கும். அந்த இடம் பரப்பானது. ஒரு பெரிய டாக்டர் அவசரமாக உள்ளே போக அவரை பின் தொடர்ந்த என்னை ஒரு கட்டத்திற்கு மேல் உள்ளே செல்ல விடாமல் தடுத்து விட்டார்கள்.
ஆனால், அங்கிருந்தே என்ன நடக்கிறது என்று கவனிக்க முடிந்தது. அவனை சுற்றி நிறைய பேர் நின்று கொண்டிருக்க, அவன் உடல் விடாமல் உதறிக் கொண்டிருந்தது. பிட்ஸ் வந்திருந்தது. வெளியே ஓடிப்போய் மருத்துவ உபகரணங்களை எடுத்து வந்த வெள்ளை உடை பணியாளர் ஒருவரை வழி மறித்து, “அவரு எப்படி இருக்கார். உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையில்ல. சொல்லுங்கண்ணா… பொழச்சுடுவாருல்ல ” என்றேன் வெடித்து வரும் அழுகையுடன்.
‘‘கொஞ்சம் வழி விடுங்கம்மா’’ என்று என்னை தாண்டி ஓடியவர், என்ன தோன்றியதோ ஒரு நிமிடம் திரும்பி, “கடவுள் இருக்காரும்மா… அந்த மருதமலை முருகன் என்னைக்கும் உங்கள கைவிட மாட்டான். அவனை நம்புங்க” என்று சொல்லி விட்டுப் போனார்.நடக்கிற ஒன்றும் எதிர்பார்க்கிற மனதிற்கு சாதகமாக இல்லை என்று புரியும் போதே, சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு டாக்டர் என்னை கடந்து போனார். ‘‘டாக்டர் டாக்டர்’’ என்று நான் கத்தியது நிச்சயமாக அவருக்கு தெரிந்து இருக்கும். எந்தப் பதிலும் இல்லை. திரும்பி உள்ளே பார்த்தேன். முகத்தை வெள்ளை துணியால் மூடுவது தெளிவாகத் தெரிய நான் மீண்டும் ஒருமுறை மயங்கினேன்.
இந்த முறை கண் விழித்த போது கைகளில் ட்ரிப்ஸ் இருந்தது. இது தனியார் மருத்துவமனை அறை.“ரொம்ப டயர்டா இருந்தா… நேத்துல இருந்து ஒண்ணுமே சரியா சாப்பிடல இல்ல அங்கிள். அதான் மயக்கம் போட்டு விழுந்துட்டா… எப்ப வேணாம் கண் முழிக்கலாம்னு டாக்டர் சொல்லி இருக்காரு” என்று பேசிக் கொண்டே உள்ளே வந்த ராதிகா என்னை பார்த்ததும், “ஹோப் யு ஆர் பைன் நொவ்… ரொம்ப வீக்கா பீல் பண்றியா” என்றாள் புன்னகைத்துக் கொண்டே.
“ஆ… அவரு.. அவரு முகத்தை மூட்றத…நா… நான் என் கண்ணால பார்…” முடிக்க முடியாமல் ட்ரிப்ஸை கோபமாய் எடுத்து விட்டு மீண்டும் அழுகத் தொடங்குவதற்கும்… என்னவன் ஒரு சின்னக்காயம் கூட இல்லாமல் சிரித்தபடி ரூமுக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.மனதில் யானை பலம் வந்த மாதிரி இருந்தது. வேகமாக எழுந்து அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டேன். கண்களில் வெள்ளமாய் கண்ணீர். இன்னும் என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. பதறிப்போய் இறுக்கமாய் அணைத்து சமாதானப்படுத்தினான்.எனக்கு ஒன்றும் புரியவில்லை… நிறைய கேள்விகளுடன் அவன் முகத்தைப் பார்த்தேன்.
“ட்ரெயின்ல என்னோட மொபைல யாரோ திருடிட்டாங்க. உனக்கு தகவல் சொல்லலாம்னா உன் மொபைலுக்கு கூப்டா உன்னோட போன் சுவிட்ச் ஆப். விடாம ட்ரை பண்ணிக் கிட்டே இருந்தேன். ஒரு நேரத்துக்கு அப்புறம் ரொம்ப பயந்துட்டேன். அப்புறம் எப்பவோ நீ என் போன்ல ஒரு டைம் உன் ஃபிரெண்ட் மதுகிட்ட பேசுன நம்பர பிடிச்சு அங்க இருந்து ராதிகாவை ரீச் பண்றதுக்குள்ள நிறைய விஷயங்கள் நடந்துருச்சு… ரொம்ப பயந்துட்டியா” என்று நெற்றியில் முத்தமிட்டவனிடம்… “முதல்ல மருதமலைக்கு கிளம்புங்க” என்றேன் லேசான சிரிப்புடன்.
ச.ஆனந்தகுமார்
