நன்றி குங்குமம் தோழி
‘‘நீங்க எந்தத் தொழில் எடுத்து செய்றீங்களோ… அதில் ஆர்வமும், அதற்கான பொறுமையும் இருக்கணும். முழுநேரம் உழைக்கணும். கூடவே மார்க்கெட்டிங்கும் செய்யணும்! முதலில் வாடிக்கையாளர்கள் நம்ப மாட்டாங்க. உங்களது தயாரிப்புகள் நம்பிக்கையை தூண்டணும். இதெல்லாம் இருந்தால் வாடிக்கையாளர்களே நம்மை தேடி வருவாங்க’’ என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த லிஜா. இவர் வேத்சா கோல்ட் ஃப்ரெஷ் ஜூஸ் என்ற பெயரில் பிசினஸ் செய்து வருகிறார். ‘‘எனக்கு மார்த்தாண்டம் பக்கத்தில் உள்ள தேவிகோடுதான் சொந்த ஊர். என் கணவருக்கு திற்பரப்பு அருகே ஆலஞ்சோலை கிராமம். அவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் நாங்க அங்கேயே செட்டிலாயிட்டோம்.
நான் (DMLT) டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி முடித்துவிட்டு சிங்கப்பூரில் வேலை செய்தேன். அப்புறம் இங்கேயே வந்ததும் 2012ல் மெழுகுவர்த்தி தயாரிக்க ஆரம்பித்தோம். தமிழ்நாடு முழுவதும் ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு ரெஸ்டாரண்ட்டுகளுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்தோம். மேலும், மெழுகில் தீபம் தயாரித்து விற்பனை செய்தோம். அதிலும் ஆர்டர் வர ஆரம்பித்தது. வருமானமும் கிடைத்தது.
பிசினஸ் நன்றாக நடக்கும் போதுதான் ஏதாவது தடை வரும். அப்படித்தான், மெழுகை உருக்கும் போது அதிலிருந்து வெளிவரும் வாசனை எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் அந்தத் தொழிலை தொடர முடியாமல் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிசினஸ் நன்றாக செய்துவிட்டு சும்மா இருக்க என்னால் முடியவில்லை. அதே சமயம் வேறு என்ன செய்யலாம் என்றும் தெரியவில்லை’’ என்றவர், தன் சகோதரர் கொடுத்த யோசனையில்தான் கோல்ட் ஃப்ரெஷ் ஜூஸ் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
‘‘என் சகோதரர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் ஒருநாள் என்னிடம் கோல்ட் ஃப்ரெஷ் ஜூஸ் தயாரிக்கும் மெஷினரி பற்றியும், அங்கு அதற்கான கடைகள் இருப்பது பற்றி கூறினார். அதில் பழங்கள், காய்கறிகள் அரைக்கும் போது சூடு ஏறாமல் அதிலுள்ள நார்ச்சத்து வீணாகாமல் அப்படியே சாறாக கிடைக்கும் என்றார். முதலில் அறுபதாயிரம் செலவில் வீட்டு உபயோகத்திற்காக டொமஸ்டிக் கோல்ட் ஃப்ரெஷ் ஜூஸ் மெஷின் வாங்கி பயன்படுத்தினோம். அதன் சுவை நன்றாக இருந்ததால் இதையே பிசினஸாக செய்ய முடிவெடுத்து 2023ல் வேத்சா கோல்ட் ஃப்ரெஷ் ஜூஸ் எனும் பெயரில் ஆரம்பித்தோம். எங்களின் நண்பர்கள் முதலில் வாடிக்கையாளர்களாக மாறினார்கள். அவர்களை தொடர்ந்து மேலும் பலர் அதிகரித்தனர்.
நாங்க இந்த பிசினஸ் ஆரம்பித்த போது வாடிக்கையாளர்களிடம் இருந்து பல கேள்விகள் எழுந்தது. ஆரோக்கியமானதா? கலர் மற்றும் ரசாயனம் கலக்கப்பட்டிருக்குமா? இப்படி கேள்விகள் எழுந்தன. நாங்க எதுவும் கலப்பதில்லை. பழங்கள் மற்றும் காய்கறிகளை அப்படியே மெஷினில் போட்டு ஜூஸாக தருகிறோம். சர்க்கரை, தண்ணீர் சேர்ப்பதில்லை. அதேபோல் எந்தவித ப்ரிசர்வேடிவும் இதில் சேர்க்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
எங்களின் ஜூஸினை குடித்தவர்கள் பலரும் பழங்கள், காய்கறிகளை நேரடியாக சாப்பிடுவது போன்ற உணர்வு தருவதாக கூறுவார்கள். ஆரம்பத்தில் நான் மட்டுமே செய்து வந்தேன். தற்போது எங்களிடம் ஐந்து பேர் வேலை பார்க்கிறார்கள். மேலும், ஆர்டர்கள் அதிகமானதால், பெரிய அளவு இயந்திரத்தை வாங்கினோம்’’ என்றவர், ஜூஸுடன் சாலட்டும் விற்பனை செய்து வருகிறார்.
‘‘எங்களிடம் ஜூஸ் வாங்கிய பலரும் பழங்கள் மற்றும் காய்கறி சாலட்களும் கொடுக்க சொல்லிக் கேட்டார்கள். அவர்களுக்காக கேரட், வெள்ளரி, செலரி, ஆப்பிள், புதினா, மாதுளை, பீட்ரூட், திராட்சை, பைனாப்பிள், இஞ்சி, புதினா, மாங்காய், ஆரஞ்சு, மஞ்சள், நெல்லிக்காய், கறிவேப்பிலை, சீரகம், தயிர் போன்ற 200க்கும் மேற்பட்ட ஜூஸ்களுடன், ஃப்ரூட் சாலட்டுகள், 15 விதமான முளைக்கட்டிய பயறு வகைகளையும் விற்பனை செய்து வருகிறோம்.
நாகர்கோவில் முழுவதும் தினமும் சராசரியாக 80 முதல் 85 பாட்டில்கள் ஜூஸ் மற்றும் 50 ஃப்ரூட் சாலட்டுகள் விற்பனையாகின்றன. வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடி சப்ளை செய்கிறோம். எங்களின் வாடிக்கையாளர்களுக்கு என தனிப்பட்ட வாட்ஸப் க்ரூப் உள்ளது. அதில் இன்று என்ன ஸ்பெஷல் சாலட்னு குறுஞ்செய்தி அனுப்பிடுவோம். விரும்புபவர்கள் அதிலேயே ஆர்டர் செய்திடுவார்கள். அதற்கேற்ப நாங்க சப்ளை செய்வோம்.
சாலட் மற்றும் ஜூஸிற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்பதால், அன்றைக்கு தேவையானதை அன்று வாங்கித்தான் தயாரிக்கிறோம். அப்போதுதான் ஜூஸ் ஃப்ரெஷ்ஷாகவும், சுவையாகவும், நார்ச்சத்து நிறைந்திருக்கும். மேலும், வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பிறகு அதில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது, தயாரித்த நேரம், எத்தனை மணிக்குள் சாப்பிட வேண்டும் என்று அனைத்து விவரங்களும் பாட்டிலில் குறிப்பிட்டிருக்கும். ஜூஸ்கள் 200 மில்லி முதல் 1 லிட்டர் அளவுகளில் கிடைக்கும்’’ என்றவர், ஜிம் மற்றும் மருத்துவமனைகளுக்கும் சப்ளை செய்து வருகிறார்.
‘‘உணவு சார்ந்த தொழில் என்பதால் FSSI சான்றிதழ் பெற்றிருக்கிறோம். தற்போது தனி யூனிட் அமைத்து அங்குதான் தயாரிக்கிறோம். சிலர் பிரான்சிசைஸ் கேட்கிறார்கள். ஆனால், எங்களுக்கு அதில் விருப்பமில்லை. காரணம், ஒரு சிலர் அதிக லாபம் பார்க்க தண்ணீர் கலக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் எங்களின் தரம் குறையும். என்னுடைய பிசினஸ் சக்சஸாக மாற எங்களின் தரம் ஒரு முக்கிய காரணம்.
ஆரம்பித்த ேபாது இருந்த சுவைதான் இன்றும் நாங்க கடைபிடிக்கிறோம். அடுத்து என் கணவர். அவரின் முழு ஒத்துழைப்பு மற்றும் நான் துவளும் போது எனக்கு ஊக்கமளித்தவர். எங்களோட ஆசை 24 மணி நேரம் இயங்கக்கூடிய ஜூஸ் கடை ஒன்றை ஆரம்பிக்கணும். மற்ற மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சியில் இருக்கிறோம்’’ என்றார் லிஜா.
தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்
