×

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி நடைபெறவில்லை தீட்சிதர் பரபரப்பு பேட்டி

சிதம்பரம், மார்ச் 11: நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால்தான் இந்த ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெறவில்லை என்று தீட்சிதர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று நாட்டியாஞ்சலி விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு தங்களது நாட்டியத்தை நடராஜருக்கு அர்ப்பணம் செய்வார்கள். அதன்படி கடந்த 1981ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தில்லை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடராஜர் கோயிலில் நடந்து வந்தது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வகிக்கலாம் என்று கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து பொது தீட்சிதர்கள் கோயிலிலும், தனியார் அறக்கட்டளையினர் தெற்கு வீதியில் உள்ள, விஎஸ் டிரஸ்ட் வளாகத்திலும் நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர்.

இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெறாது என்று பொது தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் அன்னதான அறக்கட்டளை தலைவர் நவ தாண்டவ தீட்சிதர் கூறுகையில், பொது தீட்சிதர்கள் நடத்தும் நாட்டியாஞ்சலி விழாவில் வரவு -செலவு அறிக்கை குறித்து நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால்தான் இந்த ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெறவில்லை, என்றார். இதனால் தங்கள் நாட்டியத்தை நடராஜருக்கு அர்ப்பணிக்க வந்த வெளிமாநில மற்றும் வெளிநாட்டு நாட்டிய கலைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Tags : Dixit ,Chidambaram Natarajar Temple ,
× RELATED கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு...