×

பாப்பாரப்பட்டியில் நடந்த 2 நாள் ஆய்வில் ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் ஆக்ரமிப்பு நிலம் மீட்பு

தர்மபுரி, மார்ச். 10: பாப்பாரப்பட்டியில் புதிய சிவசுப்ரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான ஆக்ரமிப்பு நிலங்களில் 35 ஏக்கர் வரை அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில், பழமை வாய்ந்த புதிய சிவசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக பாப்பாரப்பட்டி, பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலங்களை சிலர் ஆக்ரமித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்களால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பாப்பாரப்பட்டி புதிய சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் நகைகள் குறித்து ஆய்வு செய்து அதை வீடியோ எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.  

 இதன் அடிப்படையில், பென்னாகரம் தாசில்தார் பாலமுருகன், டிஎஸ்பி சௌந்திரராஜன், இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் விமலா ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் தர்மபுரி மெயின்ரோடு, பாப்பாரப்பட்டி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்ரமிப்பு நிலங்கள் கண்டறியப்பட்டு அளவீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று 2வது நாளாக மந்தை மாரியம்மன் கோயில் தெரு, பாரதிபுரம், பனைகுளம் ஏரிக்கரை அருகே, அரசு மருத்துவமனை பின்புறம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு நடந்தது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த நில அளவீட்டில் 35 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 35 ஏக்கர் நிலமும் மீட்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்த அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாப்பாரப்பட்டி புதிய சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் நிலங்களை பரம்பரை அறங்காவலர் முறைகேடு செய்ததன் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேரில் அளவீடு செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இதுவரை 35 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. இப்பணிகள் முடிவடைந்ததும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றனர். அளவீடு பணியின் போது செயல் அலுவலர் சின்னசாமி, ஆய்வாளர் சங்கர், அர்ஜுனன் உள்ளிட்ட பணியாளர்கள், போலீசார் ஈடுபட்டனர்.கடந்த இரண்டு நாட்களாக நடந்த ஆக்கிரமிப்பு மீட்பு சம்பவம் பாப்பாரப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Eeswaran temple ,Paparapatti ,
× RELATED கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது