×

நாகாலாந்து மாநில பழங்குடியினரின் பாரம்பரியத்தை விளக்கும் புகைப்பட கண்காட்சி

தஞ்சை, மார்ச் 9: தஞ்சாவூரில் நாகாலாந்து மாநில பழங்குடியினரின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக, முகத்தின் குரல் என்ற பெயரில் புகைப்பட கண்காட்சி துவங்கியது. தஞ்சாவூரை சேர்ந்த ஓவியரும், புகைப்பட கலைஞருமான மணிவண்ணன் என்பவர் நாகலாந்து மாநில பழங்குடியின மக்களின் ஹார்ன்பில் திருவிழாவை கடந்த இரு ஆண்டுகளுக்கு, இந்திய அரசின் சார்பில் தென்னகப் பண்பாட்டு மையத்துக்காக புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படங்களை “முகத்தின் குரல் - நாகாஸ்” என்கிற பெயரில், தஞ்சாவூர் ராஜராஜன் மணிமண்டபத்தில் நேற்று முன்தினம் புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்தார்.

அதன்படி இக்கண்காட்சியை இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்ட தொல்லியல் கண்காணிப்பாளர் அருண்ராஜ் நேற்று முன்தினம் மாலை துவக்கி வைத்தார். இதில், இடம்பெற்றிருந்த ஒவ்வொரு புகைப்படங்களிலும், நாகலாந்து பழங்குடி மக்களின் ஆடை, ஆபரணங்கள், இசை கருவிகள், ஆயுதங்கள் என பல்வேறு விஷயங்களை தத்ரூபமாக பிரதிப்பலிக்கும் வகையில் இருந்தது பலரையும் கவர்ந்தது. இக்கண்காட்சி வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து மணிவண்ணன் கூறியதாவது; ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், நாகலாந்தின் மிகப்பெரிய அளவில், ஹார்ன்பில் திருவிழா நடைபெறும்.

இது நாகலாந்து மக்களின் வாழ்க்கை மற்றும் வரலாற்றின் சிறப்பம்சங்களை எடுத்து கூறும் வகையில் இருக்கும். அவர்களின் வளமான மற்றும் துடிப்பான கலாச்சாரம் முழுமையாக பிரதிபலிக்கும். நாகாலாந்து மக்களின் தலையில் அணியும் ஆபரணத்தில் முக்கியமான அணியாக ஹார்ன்பில் பறவையின் இறகுகள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இவ்விழாவை, தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. இதற்காக மறைந்த தென்னகப் பண்பாட்டு மைய முன்னாள் இயக்குநர் பாலசுப்பிரமணியனுக்கு சமர்ப்பணம் செலுத்தும் விதமாக இக்கண்காட்சி நடத்தப்படுகிறது என்றார். கண்காட்சி துவக்க விழாவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மூத்த மருத்துவர்கள் வரதராஜன், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Nagaland State Tribes ,
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ