×

வாடி வாடி கைப்படாத சிடி… தவுசண்ட் வாட் பல்பு போல கண்ணு கூசுதேடி’ அரசு பள்ளி விழாவில் தவெக பெண் நிர்வாகியுடன் கல்வி அமைச்சர் குத்தாட்டம்

* பெற்றோர், பொதுமக்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு

மேலூர்: அரசுப்பள்ளி விழாவில் ஆபாச அர்த்தம் கொண்ட பாடலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தவெக பெண் நிர்வாகியுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை அமைச்சரின் இந்த செயலுக்கு பெற்றோர், பொதுமக்கள் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூரில் முதல்வர் விஜய் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிறந்ததினத்தை கொண்டாடும் வகையில் ‘போதையில்லா தமிழகம் மற்றும் பெண்கள் விழிப்புணர்வு’ மினி மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. இதனை மேலூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான விஸ்வநாதன், தவெக அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் நிர்மல்குமார் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

பள்ளி வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த மேடையில் சினிமா பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டன. நிகழ்ச்சியை துவக்கி வைப்பதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேன்ட், டிசர்ட்டில் மேடை ஏறினார். தவெக மேலூர் நகர் இணைச் செயலாளரான சுபாஷினி, அப்போது ஒலித்துக் கொண்டிருந்த சினிமா பாடலுக்கு ஆடுமாறு அமைச்சரை அழைத்தார். கட்சி நிர்வாகிகள் யாரும் ஆட முன் வராத நிலையில், அமைச்சர் விஸ்வநாதன் அந்தப் பாடலுக்கு ஆடுவதற்கு தயாரானார். முதலில் ‘தளபதி கச்சேரி… தளபதி கச்சேரி… வாங்கனா வணக்கங்கண்ணா…

வெறித்தனமா வைப் ஆகலாமா’ என்ற பாடல் ஒலித்தபோது, அமைச்சரும் ‘வைப்’ ஆக தொடங்கி விட்டார். சிறிது நேரம் கையை மேலே, கீழே அசைத்தார். அடுத்ததாக விஜய்யின் சச்சின் படத்தில் இடம் பெற்ற, ‘வாடி வாடி வாடி வாடி கை படாத சிடி… தவுசண்ட் வாட் பல்பு போல கண்ணு கூசுதேடி’ என்ற ஆபாச அர்த்தங்கள் கொண்ட பாடலுக்கு செம வைப் ஆனார் அமைச்சர் விஸ்வநாதன்.

சுபாஷினியுடன் இணைந்து செம குத்தாட்டம் போட ஆரம்பித்தார். அமைச்சர் ஆடிய குஷியில் சுபாஷினியும், கீழே நின்று கொண்டிருந்த மாணவர்களையும் அந்தப் பாடலுக்கு ஆடும்படி சைகை செய்தார். அமைச்சர், தவெக பெண் நிர்வாகியின் இந்தத் திடீர் செயலால் அங்கிருந்த கல்வியாளர்கள், மாணவ, மாணவியருடன் வந்த பெற்றோர், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

‘‘அரசு பள்ளி மேடையில் தேசிய கீதம், தேச பக்தி பாடல்களும், கல்வி மேம்பாட்டு வரிகளும் ஒலிக்க வேண்டும். அரசுப்பள்ளியில் நடக்கும் விழாவில், ஆபாச அர்த்தங்கள் கொண்ட சினிமா பாடலை ஒலிபரப்பியதே தவறு. அந்தப் பாடலுக்கு ஆளுங்கட்சி பெண் நிர்வாகியுடன், உயர்கல்வித்துறை அமைச்சரும் சேர்ந்து ஆட்டம் போடலாமா? இது தமிழக கல்வித்துறைக்கே பெருத்த அவமானம். இந்தப் பாடலுக்கு ஆடிய அமைச்சருக்கு, தவெகவின் சுபாஷினி கை குலுக்கி பாராட்டியது அதைவிட பெருங்கொடுமை’’ என அங்கிருந்த பெற்றோர், பொதுமக்கள், கல்வியாளர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தவெக நிர்வாகிகளின் ரீல்ஸ் மோகம் தற்போது காங்கிரஸ் கட்சியினரையும் தொற்றிக் கொண்டதா? கூட்டணி சேர்ந்தார்களா அல்லது கட்சியுடனே ஒன்றாக இணைந்தே விட்டார்களா? இனி என்னென்ன கொடுமை எல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ என தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அமைச்சரின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

* இதுல என்ன தப்பு?
நிகழ்ச்சி முடிந்து வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம், ‘‘மேலூர் அரசு பள்ளியில் ஆபாச சினிமா பாடலுக்கு தாங்கள் நடனமாடியது வைரலாகியுள்ளதே?’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘ஏங்க… முதலமைச்சரின் பிறந்தநாளை எனது மாணவர்கள், நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து குதூகலமாக அந்த இடத்தில் கொண்டாடினோம். இது ஒரு தப்பா சார்? முதலமைச்சரின் பிறந்தநாளில் எல்லா மாணவர்களும், இளைஞர்களும், யுவதிகளும் மகிழ்ச்சியில் இருந்தபோது, நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்கிறார்கள். எனவே இளைஞர்களுக்கு மதிப்பு கொடுத்து ஆடினேன். இதுல என்ன தப்பாகி விடப்போகுது? ஒரு தப்பும் கிடையாதே?’’ என்றார்.

* ஸ்டாலின் ஆட்சி நல்லாட்சி மனம் திறந்தார் அமைச்சர்
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மினி மாரத்தான் போட்டியை துவக்கி வைத்து பேசும்போது. ‘‘இந்த 17வது சட்டமன்றத்தில் அமைச்சராக 1967க்கு பிறகு…’ என்று ஆரம்பித்தவர், தொடர்ந்து, ‘1977க்கு பிறகு காங்கிரஸ் 2026ல் பொறுப்பேற்றுள்ளது’ எனக் குழப்பத்துடன் ஆண்டுகளை குறிப்பிட்டுப் பேசினார். இதற்கெல்லாம் உச்சமாக, ‘‘மாண்புமிகு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களின் இந்த ஆட்சி நல்லாட்சியாக நடைபெற எங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறோம்’’ என்றார்.

இதில் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் இடைமறித்து, ‘முதல்வர் விஜய்னு சொல்லுங்க’ என்றதும், சமாளித்தபடி, ‘விஜய்க்கு எங்களது வாழ்த்துக்கள்’ என்றார். திமுக கூட்டணியில் நின்று ஜெயித்த காங்கிரஸ் கட்சிக்கு, அமைச்சராக்கிய பிறகும் கூட, தவெக தலைவர் விஜய் பெயர் மறந்து போனது ஒன்றும் ஆச்சரியமில்லை என பலரும், கமெண்ட் செய்தனர்.

Tags : Vaadi Vaadi ,Education Minister ,Melur ,Higher ,Minister ,Viswanathan ,Education ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து