×

அரசு பள்ளிகளில் தவெக கொடி, பேனர்

திருப்பூர் பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது. அரசுப் பள்ளிகளில் அரசியல் சார்ந்த எவ்வித நிகழ்வுகளோ, கட்சி அடையாளங்களுடன் கூடிய முகாம்களோ நடத்தப்படக் கூடாது.

ஆனால், இந்த விதிகளைப் புறந்தள்ளும் வகையில், பள்ளி நுழைவாயில் மற்றும் வளாகத்தின் உட்பகுதிகளில் தவெக நிர்வாகிகள், கட்சியின் சின்னங்கள் மற்றும் கொடிகளின் வண்ணங்கள் அடங்கிய பிரம்மாண்ட பேனர்களை வைத்திருந்தனர். மேலும், ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு முழுமையாக ஒரு அரசியல் கட்சி விழா போன்றே இந்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டிருந்தது.

ஏற்கனவே திருப்பூரில் இதேபோன்று அரசுப் பள்ளி வளாகத்திற்குள் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அரசு விதிகளை மீறி இது போன்ற கட்சி நிகழ்வுகளுக்குப் பள்ளி நிர்வாகம் தடையின்றி அனுமதி தந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதேபோல், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு பள்ளி மைதானத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, வாலிபால் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் ஏற்பாட்டில் இதற்கான பணிகள் நடைபெற்றதாகத் தெரிகிறது. இதற்காக திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தில் இருந்து அரசு ஆண்கள் பள்ளி மைதான வளாகம் வரை தவெக கொடிகள் வரிசையாக நடப்பட்டன.

பள்ளி வளாகம், மைதானத்துக்குள்ளும் தவெக கட்சிக் கொடிகள் வைக்கப்பட்ட சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் பிற கட்சியினர், பள்ளி வளாகத்துக்குள் கட்சிக் கொடி கட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘அரசு பள்ளியில் அரசியல் கட்சிக் கொடிகளை கட்டுவது அராஜக செயல். உடனடியாக கொடிகளை அகற்ற வேண்டும்’’ என வலியுறுத்தினர். இதனையடுத்து தவெக கட்சிக்கொடிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Thaweka ,KSC Government Boys Higher Secondary School ,Tiruppur ,Chief Minister ,Vijay ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து