- தமிழ்நாடு அரசு
- வீரபாண்டியன்
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தாம்பரம்
- ஆவடி
- ஓசூர்
- வேலூர்
- கோயம்புத்தூர்
- ஈரோடு
- சேலம்
சென்னை: தூய்மை பணியை தனியாரிடம் விடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியை தனியாருக்கு விடுவதற்கான முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பொது சுகாதாரம் என்பதில் தூய்மைப் பணி மிகவும் இன்றியமையா நிரந்தப்பணியாகும்.
மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணியை தனியார் மயமாக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும். ஏற்கனவே, தற்காலிக முறை, ஒப்பந்த முறையில் பணிபுரியும் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சமூகப் பொருளாதார பாதுகாப்பு வழங்கிட வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் நியமனம், நிர்வாகம் அனைத்தும் அரசின் நேரடிப் பொறுப்பில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த அத்தியாவசியச் சேவையை, எந்த நிலையிலும் தனியார் கையில் ஒப்படைக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
