- அண்டிகாடு ஒலயன்குடி ஏரி
- சின்ன அவுடியார்கோயில்
- தஞ்சை மாவட்டம்
- பட்டுக்கோட்டை உராடச்சி யூனியன்
- மகிஸ்லாங்கோட்டா உராட்சி
- புதிய ஆண்டு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், மகிழங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சின்ன ஆவுடையார்கோயில் ஆண்டிக்காடு ஒலையான்குடி ஏரி சுமார் 70 முதல் 75 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கடைமடை பகுதியில் உள்ளது. இந்த ஏரிக்கு புதுப்பட்டிணம் வாய்க்காலிலிருந்து தண்ணீர் வந்து இந்த ஏரி நிரம்பும். இந்த ஏரி மூலம் சுமார் 400 ஏக்கர் முதல் 500 ஏக்கர் வரை பாசன வசதி பெறும். பொதுவாக இந்த ஏரி ஆழப்படுத்தாமலும், அகலப்படுத்தாமலும் கரைகளை பலப்படுத்தாமல் இருப்பதால் தண்ணீர் ஏரியில் தேங்கி நிற்பதற்கு வாய்ப்பு இல்லாத ஒரு சூழ்நிலையே இன்றளவும் உள்ளது.
ஆண்டுதோறும் காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூரில் தண்ணீர் குறைவாக இருப்பதால் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் இந்த ஒலையான்குடி ஏரியில் ஏரியே தெரியாத அளவிற்கு நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் காடுபோல் மண்டிக்கிடந்தது. இந்த நெய்வேலி காட்டாமணக்கு செடிகளை கால்நடைகள் தின்று வாதம் வந்து இறந்துபோகும் சூழ்நிலை உருவானது.
இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இந்த நெய்வேலி காட்டாமணக்கு செடிகளை அகற்றி ஏரியை தூர்வார வேண்டும் என்ற பலமுறை கோரிக்கை முன்வைத்தும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் இந்த ஏரியில் பாசன வசதிபெறும் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது சொந்த செலவில் (ரூபாய் இரண்டரை லட்சம்) இந்த நெய்வேலி காட்டாமணக்கு செடிகளை அகற்றுவதற்கு முடிவு செய்தனர். அதன்படி நாள் ஒன்றுக்கு 2 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் காட்டாமணக்கு செடிகளை அகற்றிவரும் பணியில் கடந்த 1 வாரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஏரியை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி தூர்வார வேண்டும். மிக முக்கியமாக இந்த ஏரிக்கு செல்வதற்கு பாதை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து எந்தவித பலனும் இல்லாததால் தங்களது சொந்த செலவில் பணிகளை மேற்கொண்டுவரும் விவசாயிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
