×

இறைவனும் மனிதனும்

பகுதி 2

நமக்கு மட்டும் ஏன் கஷ்டம்? நாம் வணங்கும் தெய்வங்கள் ஏன் சமூகத்தில் விபரீதமான கொலை, கொள்ளை போன்ற துயரங்கள் நேரும்போது காப்பாற்றுவதில்லை? என்ற கேள்வி எழுகிறது. நியாயமான கேள்விதான். உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான உயிரினங்களில், மனித இனம் மட்டுமே இதைக் குறித்துச் சிந்திக்கிறது. மற்ற உயிரினங்கள், தங்கள் இயல்புப்படி வாழ்ந்து மடிந்து விடுகின்றன. உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையில், ஆறறிவு படைத்தவனாக, சிந்திக்கும் தன்மை உடையவனாக, மனிதன் மட்டுமே இருக்கின்றான். இந்த மனிதன்தான் பக்தியோடு இறைவனை வழிபடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறான். அந்த பக்திக்கு இறைவன் கட்டுப்பட்டு எல்லா விஷயங்களையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

இந்த உலகத்தில் உள்ள தீமைகள் எல்லாம், உடனுக்குடன் நீங்க அந்தந்த இடத்தில் இறைவன் தோன்றி, அப்போதைக்கு அப்போதே தீமை செய்பவர்களுக்கு தண்டனைகளை வழங்கி மற்றவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அப்படி எதிர்பார்க்கின்ற தகுதி தனக்கு இருப்பதாகவும், அவன் நினைத்துக் கொள்ளுகின்றான். இவற்றையெல்லாம் நாம் ஆழ்ந்து பரிசீலனை செய்தால்தான் இந்த ஆன்மிகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஆன்மிகம் என்பது பெரும்பாலும் தத்துவங்களாகவும், சில நேரங்களில் இன்றைய உலகுக்கு பொருந்தாத கதை களாக இருப்பதாலும், அந்தக் கதைகளின் பின்னணியில் உள்ள ஆன்மிக கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், இப்படிப்பட்ட குழப்பங்கள் வருகின்றன.

இதை வெறும் புராணக்கதைகளின் அடிப்படையில் மட்டும் ஆராயாமல், சற்று அறிவியல் பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் சிந்தித்துப் பார்த்தால், ஒரு தெளிவான விடையை நோக்கி நாம் நகரலாம். இங்கே இரண்டு விஷயங்களை முதலில் நாம் பரிசீலிக்க வேண்டும்.

* நாம் இருக்கக்கூடிய இந்த பிரபஞ்சம் பிரம்மாண்டமானது. அந்தப் பிரபஞ்சத்தில் நாம் இருக்கக்கூடிய இந்த பூமியின் நிலை.

* இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரக் குடும்பங்களில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் சுற்று கோள்களில் ஒன்றான பூமியில், நாம் இருக்கக்கூடிய இருப்பு.

முதலில் இந்த பிரபஞ்சமானது மிகப்பிரமாண்டமாக இருக்கிறது. எல்லை காண முடியாததாக இருக்கிறது. ஒப்பீட்ட அளவில் அகண்ட பிரம்மாண்டத்தின் ஒரு துளியாகிய நட்சத்திரம் சூரியன். அதாவது மிகப்பெரிய கடலில் ஒரு சிறிய டம்ளரில் உள்ள தண்ணீரின் அளவுதான் சூரியனின் அளவு. சூரியனைச் சுற்றி பல கோள்கள் சுற்றி வருகின்றன.

சுக்கிரன், புதன் மூன்றாவதாக பூமி. செவ்வாய், வியாழன், சனி என்ற கோள்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. இந்த பூமியோ, பிரபஞ்சமோ, மனிதன் உருவாக்கியது அல்ல. உருவாக்கவும் முடியாது. ஒரு சூரியனுக்குள் ஆயிரக்கணக்கான பூமியை உள்ளே போடலாம் என்று அளவு சொல்லுகின்றார்கள். அப்படியானால், பூமி என்பது கையில் வைத்திருக்க கூடிய ஒரு எலுமிச்சம் பழம் அளவில் உள்ள ஒரு கிரகம்.

இந்த கிரகத்தில்தான் மிக ஆழமான பசிபிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும், இந்து மகா சமுத்திரமும், இன்னும் எண்ணற்ற கடல்களும் மிக உயரமான மலைகளும் காடுகளும் இருக்கின்றன. இந்த பூமியில் எண்ணற்ற உயிரினங்கள் வாழுகின்றன. யானைகள், காண்டாமிருகங்கள், சிங்கங்கள், புலிகள், மலைப்பாம்பு போன்ற பிரம்மாண்டமான பாம்புகள், சிறிய வகை பாம்புகள், பல்லிகள், எறும்புகள் என்று பல உயிரினங்கள் வாழ்கின்றன. அதில் ஒரு உயிரினமாக மனிதன் வாழுகின்றான்.

பரிணாம வளர்ச்சியில், படிப்படியாக வளர்ந்த உயிரினங்களில், சிந்தித்து செயலாற்றி கேள்வி கேட்டு விடை காணக்கூடிய அறிவுள்ளவனாக மனிதன் வாழுகின்றான். மற்ற உயிர்களுக்கு கடவுளைப்பற்றிய பிரச்னை இல்லாத போது, மனிதனுக்கு மட்டும் இறைவன் ஏன் தேவைப்படுகிறான்?

இதற்கு முதலில் விடை காண வேண்டும். மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஒரு தனித்துவமான தேடலும், தத்துவப் பிரச்னையும் மனிதனுக்கு மட்டும் இருப்பதற்குக் காரணம், மனிதனின் மன அமைப்பும் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆறாம் அறிவு. விலங்கினங்கள் அனைத்தும் தங்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உறக்கம், பயம், இனம் பெருக்குதல் (உண்ணல், உறங்கல், பயப்படல், புணர்தல்) ஆகியவற்றோடு தங்களைச் சுருக்கிக் கொள்கின்றன. அவை இயற்கையோடு இயைந்து, அதன் விதிகளின்படி மட்டுமே வாழ்கின்றன. ஒரு மான் பசித்தால் புல் தின்னும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கும். அபாயம் வந்தால் ஓடும். அதன் வாழ்க்கை பெரும்பாலும் உடல் தேவைகளைச் சுற்றியே இயங்குகிறது.

ஆனால் மனிதன் மட்டும், உணவு இருந்தாலும் திருப்தி அடைவதில்லை. செல்வம் இருந்தாலும் இன்னும் ஏதோ குறைவாக உணர்கிறான். வெற்றி பெற்றாலும் “இதற்குப் பிறகு என்ன?’’ என்று கேட்கிறான். மரணத்தைப் பற்றி சிந்திக்கிறான். நீதியும் அநீதியும் பற்றி ஆராய்கிறான். ஆன்மிகம் இதை “ஆத்மாவின் விழிப்பு’’ என்று கூறுகிறது.

நாம் பேதங்களையும், உபநிடதங்களையும், ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்களையும், சித்தர்களின் பாடல் களையும் உற்றுநோக்கும்பொழுது, இந்தத் தேடலைக் குறித்த பல்வேறு நிலைகளை நம்மால் காண முடியும். ஆனால் வேதங்களையும், உபநிடதங்களையும், நாம் வெறும் மந்திரங்களாகவும், வழிபாட்டில் ஒரு அங்கமாகவும் அல்லது சடங்குகளின் ஒரு அங்கமாகவும்தான் நினைக்கிறோமே தவிர, அதில் உள்ள ஆழமான அர்த்தங்களை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

ஆனால், உபநிடதங்கள் அனைத்தும், இந்த விழிப்புணர்வை நோக்கியே மனிதனை நகர்த்துகின்றன. அதனால்தான், ஏதோ பிறந்தோம் சாப்பிட்டோம், பிள்ளைகளைப் பெற்றோம், வாழ்ந்தோம், முடித்தோம் என்று நினைக்கின்ற மனிதர்களை, பசுவுக்குச் சமானம் என்று சொல்லுகின்றார்கள். அவன் மனிதனாகப் பிறக்காமல் விலங்காக பிறந்து இருந்தாலும்கூட இந்தத் தேவைகள் அவனுக்கு நிறைவேறி இருக்கும். எனவே அவன் கிட்டத்தட்ட அவன் இந்த நிலையில் (உடல் தேவைகளை மட்டுமே கருதும் நிலையில்) பசுவுக்குச் சமானம் என்கிறார்கள். ஆழ்வாரின் அற்புதமான பாசுரம்;

“உண்டியே உடையே என்று உகந்து ஓடும்
மண்டலத் தாரோடு கூடுவது இல்லை யான்’’ – (குலசேகர ஆழ்வார்)

மனிதனுக்கு மட்டுமே “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? என் வாழ்வின் நோக்கம் என்ன?’’ என்று சிந்திக்கும் பகுத்தறிவு (ஆறாம் அறிவு) கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேடலின் உச்சகட்டப் புள்ளியே `இறைவன்’ அல்லது `பரம்பொருள்’ என்பதாகும். மூலத்தைத் தேடும் இந்தத் தாகம், மனிதனைத் தவிர வேறு எந்த உயிருக்கும் இல்லை. அதனால்தான் மனிதப் பிறவியை உயர்ந்த பிறவி என்றார்கள். ஆன்மிகத் தத்துவங்களின்படி, ஒரு ஆன்மா புல், பூண்டு, புழு, பறவை, விலங்கு எனப் பல பிறவிகளைக் கடந்து, அதன் பரிணாம வளர்ச்சியின் உச்சமாகவே மனிதப் பிறவியை எடுக்கிறது. இதை சிவபுராணத்தில் மணிவாசகர்;

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்
மரமாகிப்பல் விருக மாகிப்
பறவையாய்ப் பாம்பாகிக்கல்லாய்
மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த்
தேவராய்ச்செல்லாஅ நின்ற
இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும்
பிறந்திளைத்தேன்’’

– என்று வரிசைப்படுத்துகிறார். மிருகங்கள், இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு, பூமியோடு தங்களை நிறைவு செய்து கொள்கின்றன. ஆனால், மனிதன் பூமியில் வாழ்ந்தாலும் அவனது ஆன்மிகத் தேடல், விண்வெளியைத் தாண்டியது. இயற்கையைத் தாண்டிய ஏதோ ஒரு பேரதிர்வு தன்னை இயக்குகிறது என்பதை உணரும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே இருப்பதால்தான், அவனுக்கு மட்டும் இறைவனின் தேவையும், தேடலும் அவசியமாகிறது.

 

Tags : God ,
× RELATED கனவை நிஜமாக்கும் நெடுங்குடி கைலாசநாதர்!!