சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கல்யாணம் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேபாள நாட்டை சேர்ந்த லட்சுமணன் பூசல் (40) 10 ஆண்டுகளாக செக்யூரிட்டியாக இருந்தார். இடையில் நின்ற இவர், கடந்த 3ம் தேதி மீண்டும் செக்யூரிட்டி பணியில் சேர்ந்தார். பள்ளியில் இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில், தனது மனைவி ஸ்மித்ரா (29) மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் தங்கினார். மூத்த மகள் கீதா பூசல் (8) அவர் பணியாற்றும் பள்ளி நடத்தும் மற்ெறாரு பள்ளியான தனக்கோடி பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். லா (4) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை மாணவர்கள், ஆசிரியர்கள் சென்ற பிறகு, பள்ளியில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை எடுக்க மறைமலைநகர் வள்ளல் குமரன் தெருவை சேர்ந்த அஸ்வின் (32) என்பவர் வந்துள்ளார். அப்போது பள்ளி யின் 2வது மாடி கைப்பிடி கம்பியில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்குவதை பார்த்து, பள்ளியில் உதவியாளராக வேலை செய்யும் வாணி (43) என்பவரிடம் கூறியுள்ளார். அவர் சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் வந்து பார்த்த போது, வகுப்பு அறையில் செக்யூரிட்டியின் மூத்த மகள் கீதா தூக்கில் தொங்கிய நிலையிலும், செக்யூரிட்டி லட்சுமணன் பூசல் தூக்கிட்ட கயிறு அறுந்து மயக்க நிலையில் கிழே கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
தகவலின்படி விரைந்து வந்த போலீசார், செக்யூரிட்டியை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மகள் கீதா இறந்து நிலையில் கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையே செக்யூரிட்டி லட்சுமணன் பூசல் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை ெசய்த செக்யூரிட்டியின் மனைவி ஸ்மித்ரா சிறிது நேரத்தில் பள்ளிக்கு வந்தார். சாதாரணமாக இருந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது கணவர், வீடியோ காலில் பேசியபடி எனது மூத்த மகளை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக தெரிவித்தார். போனை துண்டித்ததால் நான் பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் இங்கு வந்தேன் என்றார். ஆனாலும் ஸ்மித்ராவிடம் போலீசார் தொடர் விசாரித்தனர். அப்போது, பல அதிர்ச்சி தகவல்கள் அவரது மனைவி ஸ்மித்ரா மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
நேபாளத்தை சேர்ந்த லட்சுமணன் பூசல், குடும்ப வறுமை காரணமாக 10 வயது இருக்கும் போது இந்தியாவுக்கு வந்தார். பிறகு டெல்லி, பஞ்சாப் மற்றும் சென்னையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2018ல் ஸ்மித்ராவை நோபாளத்தில் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019ம் ஆண்டு வேலைக்காக தனது மனைவியுடன் சென்னைக்கு வந்தார். அப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள உறவினர் கோபால் சர்மா என்பவர் வீட்டில் தங்கினர். பிறகு நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை 3வது கூறுக்கு தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து மனைவியுடன் குடியேறினார். அதே பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் லட்சுமணன் பூசல் சமையல் வேலை செய்து வந்தார். அவரது மனைவி ஸ்மித்ரா நுங்கம்பாக்கம் ரயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் அதிகாரிகள் வீடுகளில் சமையல் வேலை செய்து வந்தார்.
நாளடையில் வீட்டில் தண்ணீர் கேன் போடும் சந்தீப் என்பவருடன் சுமித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. லட்சுமணன் பூசல் வேலைக்கு சென்றதும், சுமித்ரா தனது கள்ளக்காதலன் சந்தீப்புடன் வீட்டிலேயே உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஒரு நாள் வீட்டில் லட்சுமணன் பூசல் இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து கண்டித்துள்ளார். பிறகு கள்ளக்காதலன் அவரது நண்பர்களுடனும் அவரது சுமித்ராவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் சுமித்ரா கணவரிடம் கோபித்துக்கொண்டு விட்டை விட்டு சென்றுவிட்டார். பிறகு லட்சுமணன் பூசல் கடந்த மார்ச் 12ம் தேதி தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி அவரது மனைவியை கண்டுபிடித்து கணவருடன் சேர்த்து வைத்துள்ளனர்.
பின்னர் வேறு வழியின்றி வாடகை வீட்டை கடந்த மாதம் 25ம் தேதி காலி செய்துவிட்டு, நுங்கம்பாக்கம் புதிய டேங்க் சாலை 3வது குறுக்கு தெருவில் உள்ள உறவினர் கோபால் சர்மா வீட்டில் லட்சுமணன் பூசல் தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் தங்கியுள்ளார். அதன் பிறகு தனது ஓட்டல் சமையல் வேலையை விட்டுவிட்டு ஏற்கனவே வேலை செய்த சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பள்ளிக்கு செக்யூரிட்டி வேலைக்கு கடந்த 1ம் தேதி வந்துவிட்டார். பிறகு குடும்பத்தை கடந்த 3ம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார். இடத்தை மாற்றி பள்ளியில் தங்க வைத்தும், அவரது மனைவி சுமித்ரா தனது கள்ளக்காதலை கைவிடாததால் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி சுமித்ராவை அவரது கள்ளக்காதலன் பள்ளிக்கு வந்து பார்த்து பேசி உள்ளார். இதை செக்யூரிட்டி லட்சுமணன் பூசல் பார்த்து கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவரது மனைவி தனது 2 பெண் குழந்தைகளுடன் சொந்த நாடான நேபாளம் செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். அப்போது லட்சுமணன் பூசல் தனது மூத்த மகள் கீதாவை தன்னுடன் விட்டுவிட்டு போ என்று கூறியுள்ளார். அதன்படி அவரது மனைவி இளைய மகளை மட்டும் அழைத்துக்கொண்டு நேபாளம் செல்வதாக கூறி சென்றுள்ளார். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து டிக்கெட் பதிவு செய்த போது, டிக்கெட் கிடைக்கவில்லை. காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் சுமித்ரா தனது இளைய மகளுடன் கள்ளக்காதலனை தொடர்பு கொண்டு அவருடன் சென்றுவிட்டார். பின்னர் தனது மூத்த மகள் கீதாவுடன் செக்யூரிட்டி லட்சுமணன் பூசல் கடந்த 10 நாட்களாக பள்ளி வளாகத்திலேயே வசித்து வந்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை நேபாளத்தை சேர்ந்த உறவினர் ஒருவர் சென்னை வந்துள்ளார். அவர் லட்சுமணன் பூசலை நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தனது மனைவி மற்றும் மகள் நேபாளம் வந்துவிட்டார்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் நேபாளத்திற்கு உனது மனைவி வரவில்லை என்று கூறியுள்ளார். அதைதொடர்ந்து உடனே தனது மனைவிக்கு போன் செய்து ‘எங்கே இருக்கிறாய்…. என்று’ கணவன் லட்சுமணன் பூசல் கேட்டுள்ளார். முதலில் அவரது மனைவி நேபாளத்தில் இருப்பதாக பொய் கூறியுள்ளார். உடனே உறவினர் பெயரை கூறி நீ நேபாளத்திற்கு செல்லவில்லையாமே என்று சத்தம் போட்டுள்ளார்.
பிறகு தனது மனைவி எங்குள்ளார் என்று சென்னையில் பணியாற்றும் நேபாள நண்பர்கள் உதவியுடன் தேடிய போது, லட்சுமணன் பூசல் மனைவி சுமித்ரா மற்றும் இளைய மகள் ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் அவரது கள்ளக்காதலனுடன் தங்கி இருந்தது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த லட்சுமணன் பூசல், கடும் மன வேதனையில் இருந்துள்ளார். அதேநேரம், திருமணத்திற்கு முன்பு தனது மனைவி கள்ளக்காதலனுடன் தொடர்ப்பில் இருந்ததால், ‘தனக்கு பிறந்த 2 பெண் குழந்தைகளும் தனக்கு பிறக்கவில்லை என்றும், கள்ளக்காதலனுக்கு தான் பிறந்துள்ளது என்று’ நினைத்து மீண்டும் தனது மனைவிக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்துள்ளார்.
அப்போது எதிர் முனையில் பேசிய தனது மனைவியிடம், ‘பல முறை கண்டித்தும் உனது கள்ளக்காதலனை நீ கைவிடவில்லை… எனவே இனி நானும் எனது மகளும் உனக்கு தொந்தரவு செய்ய மாட்டோம் என்று கூறியபடி, வீடியோ காலிலேயே தனது மூத்த மகள் கீதாவை லட்சுமணன் பூசல் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொன்றுள்ளார். அதை அவரது தாய் வீடியோவில் பார்த்தபடி அழுது துடித்துள்ளார். பிறகு இறந்த தனது மகளை கயிறு மூலம் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். அதன் பிறகு அவர் வீடியோ அழைப்பை துண்டித்துவிட்டார். பிறகு, லட்சுமணன் பூசல் தனது மகளை கொலை செய்துவிட்டோமே என்று மன வருத்தத்தால் அவரும் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று உயிரிழந்து உள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
