×

வன்னிவேடு முருகனுக்கு பீட்ரூட் சாதப் பிரசாதம்

சப்த ரிஷிகளும் ஆறு இடங்களில் ஈசனை நிறுவி வழிபட்ட தலங்களை ஷடாரண்ய தலங்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, பாலாற்றங்கரையில் அமைந்துள்ள அகத்தீஸ்வரம். வன்னிமரக் காட்டில் அகத்திய மாமுனி தன் திருக்கரங்களால், மணலைக் கொண்டு உருவாக்கிய ஈசனை ஸ்தாபித்து வழிபட்ட தலம் இது. இத்தல முருகபெருமானுக்கு பீட்ரூட் சாதம் நிவேதித்தால் செவ்வாய் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 2
பாஸ்மதி அரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: முதலில் அரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கழுவி குக்கரில் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, மூடி போட்டு மூடி, 3 விசில் விட்டு இறக்குகிறார்கள். பிறகு பீட்ரூட்டை துருவி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்கிறார்கள். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்கிறார்கள்.

பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு நன்கு வதக்குகிறார்கள். பிறகு அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, துருவி வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு, சிறிது உப்பு சேர்த்து மூடி வேக வைக்கிறார்கள். பீட்ரூட் வெந்ததும் அதனை இறக்கி, சாதத்துடன் கலந்து, கொத்தமல்லியைத் தூவி நிவேதிக்கிறார்கள். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் வாலாஜாவில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் வன்னிவேடு செல்லலாம். வாலாஜாவிலிருந்து 3 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

 

Tags : BEETROOT RICE ,VANNIVEDU MURUGAN ,Sabta Rishis ,Esen ,Shadaranya Dhalas ,Akhattiswaram ,Balathankara ,Ajatiya Mamuni ,
× RELATED யோகேஸ்வரி