இம்பால்: மணிப்பூரில் இரு பிரிவினரிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 இளைர்கள் காயமடைந்தனர். மணிப்பூர் மாநிலம், காங்கோபி மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே இன்று துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கென்லென்மாங் வைபே (18), லுன்லியாண்டாவ் வைபே (20) மற்றும் பாவுகோ லால் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உடனே அவர்கள் பாதுகாப்புப் படையினரால் சிகிச்சைக்காக இம்பாலில் உள்ள பிராந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, கூடுதல் மத்தியப் படைகள் குவிக்கப்பட்டு மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குகி சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் காங்போக்பி மாவட்டத்தில், இன்று காலை 6 மணியளவில் லெய்லோன் வைபே கிராமத்திற்கு அருகே இரு பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் மேலும் கூறினர். மணிப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்களால் மாநிலத்தில் அமைதி சீர்குலைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
