×

கோயிலுக்கு சென்று திரும்பிய போது ‘பிக் அப்’ வாகனம் கிணற்றில் பாய்ந்து 4 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி: மகாராஷ்டிராவில் சோகம்

 

சோலாப்பூர்: மகாராஷ்டிராவில் கோயில் தரிசனம் முடிந்து திரும்பியவர்களின் வாகனம் கிணற்றுக்குள் கவிழ்ந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மால்ஷிரஸ் தாலுகாவில் உள்ள தாண்டூர்வாடி கிராமம் அருகே பண்டரிபுரத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டினர் என 15 பேர் ஒரு பிக்அப் வாகனத்தில் மஸ்வாட் பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த விவசாய நிலத்திற்குள் புகுந்து அங்கிருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் 4 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் கிணற்றில் விழுந்த வாகனத்தில் இருந்த 7 பேரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோலாப்பூர் எஸ்பி அதுல் குல்கர்னி கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் கிணற்றுக்குள் விழுந்தது தெரியவந்துள்ளது, வாகனத்தை வெளியே எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது’ என்று தெரிவித்தார். இச்சம்பவத்திற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

 

Tags : Maharashtra ,Solapur ,Bandipura ,Thandurwadi ,Malshires Taluga, Maharashtra State Solapur District ,
× RELATED மணிப்பூரில் இரு பிரிவினரிடையே நடந்த...