×

புதிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டதால் திரிணாமுல் எம்பிக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்ய முடியுமா? மேற்குவங்க அரசியல் களத்தில் முக்கிய திருப்பம்

 

புதுடெல்லி: மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 20 எம்.பிக்கள் விலகி பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் மேற்குவங்க அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த 15 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தியது. சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகளால் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் திரிணாமுல் கட்சியின் மேலிடத்திற்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த 20 எம்.பிக்கள் தனியாக ஒரு அணியை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். மம்தா பானர்ஜி மற்றும் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோரது செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த இந்த எம்.பிக்கள், நீண்ட நாட்களாக தங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ரகசியமாக ஆலோசித்து வந்தனர். இந்த சூழலில் அதிருப்தி எம்.பிக்கள் 19 பேர் நேற்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து பரபரப்பு கடிதம் ஒன்றை அளித்தனர். அதில் தாங்கள் திரிபுராவைச் சேர்ந்த ‘தேசியவாத இந்திய குடிமக்கள் கட்சி’ என்ற அமைப்புடன் இணையப் போவதாகவும், இனி வரும் காலங்களில் ஆளும் ஒன்றிய பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பிற்கு முன்பாக அவர்கள் ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் இல்லத்தில் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்க உள்ளது. இதில் 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய சட்டத்திருத்த மசோதாக்களை கொண்டு வர ஒன்றிய அரசு வியூகம் வகுத்துள்ளது. இதற்கு மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்களின் ஆதரவு கட்டாயம் தேவை. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 131வது சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 238 வாக்குகளும் விழுந்ததால் அந்த மசோதா தோல்வியடைந்தது. தற்போது 20 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்துள்ளதால், நாடாளுமன்றத்தில் பாஜகவின் பலம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இணைப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒரு கட்சியின் நாடாளுமன்ற பிரிவை மட்டும் பிரித்து வேறொரு கட்சியுடன் இணைக்க முடியாது; ஒட்டுமொத்த தாய் கட்சியே இணைந்தால் மட்டுமே அது சட்டப்படி செல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், ‘கட்சித் தலைமையின் அனுமதி இன்றி இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டது எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய போதுமான ஆதாரமாகும்’ என்று கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரம் அடுத்தக்கட்டமாக நீதிமன்றத்தில் சட்ட போராட்டமாக மாற வாய்ப்புள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags : TRINAMUL ,MPS ,NEW DELHI ,MAMTA BANERJEE ,TRINAMUL CONGRESS ,BJP ,Chief Minister ,
× RELATED மணிப்பூரில் இரு பிரிவினரிடையே நடந்த...