- தமிழ்நாடு அரசு
- கடலூர்
- சென்னை
- ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம்
- பரங்கிப்பேட்டை
- கடலூர் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று போராடி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
நிலத்தையும், நீரையும் மாசுபடுத்திச் சுற்றுச்சூழலை சீர் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது. காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்தது.
அதனையடுத்து, கடந்த ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, இராமநாதபுரம் கடற்கரை பகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தொடங்கவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கடும் எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNCZMA) சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதி பாரம்பரிய மீன்பிடித் தொழில் பகுதி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தொடங்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது கடல் நீரை மாசுபடுத்தி, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்.
தனியார் பெருநிறுவனங்களின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும், கடல் வளத்தையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு அனுமதியளிக்க வேண்டாமென வலியுறுத்துகிறேன்.
