×

காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (15.06.2026) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின்கீழ் செயல்பட்டுவரும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகிய துறைகளின் மூலம் குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரது நலனிற்காகச் செயல்படுத்தப்பட்டுவரும் இல்லங்கள், பல்வேறு திட்டங்கள், சமூக சட்டங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

“வெற்றித் தமிழகம்” தொலைநோக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள துறை சார்பாக செயல்படுத்தக்கூடிய திட்டங்கள், அதற்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) செயல்பாடுகள், தத்தெடுக்கும் மையங்கள், மகளிர், குழந்தைகள், மூத்தகுடிமக்கள் ஆகியோருக்காக செயல்படுத்தப்படும் உதவி எண்கள், குழந்தைகளுக்கான காலை மற்றும் மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையச் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை, தொடர்புடைய பயனாளர்களான குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்தகுடிமக்களிடம் தடையின்றி மற்றும் துரிதமாகக் கொண்டு சேர்க்கவேண்டும் எனவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகாதபடி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மேற்படி பழக்கத்திற்கு ஆளான குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்கள்.

மேலும், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்திட ஏதுவாக, தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி இத்திட்டத்தினை முதற்கட்டமாக தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ.சித்திக், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைச் செயலாளர் ம. பல்லவி பல்தேவ், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) ஷில்பா பிரபாகர் சதீஷ், சமூகநலத்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலாளர் ச. வளர்மதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் ஐ.சா.மெர்சி ரம்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Chief Minister ,Vijay ,Chennai ,Tamil Nadu ,Department of Social Welfare and Women's Rights ,Department of Social Welfare ,
× RELATED ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும்...