சென்னை: ஜூன் மாதத்துக்கான ரூ.1,000 உரிமைத் தொகை பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் இருந்து மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15ம் தேதி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று முக்கிய வாக்குறுதி அளித்திருந்தார். எனவே ரூ.2500 எப்போது வரவு வைக்கப் போறீங்க., திட்டம் தொடருமா என பெண்கள் அடுக்கடுக்கான கேள்விகளை விஜய் அரசுக்கு எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு குறித்து முதல்வர் விஜய் கடந்த மாதம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என கூறியிருந்தார். தொடர்ந்து மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை கடந்த மாதம் 15-ம் தேதி வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு மாதம் ரூ. 2,500 என்ற வாக்குறுதி குறித்து தவெக அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. மாதம் ரூ.2,500 வாக்குறுதியை நிறைவேற்றாததால் பயனாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
