அமெரிக்கா: அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த ஸ்கை டைவிங் வீரர்கள், விமானி உள்பட 12 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
பசிபிக் ஏரோஸ்பேஸ் 750XL ரக விமானம், ஸ்கைடைவ் கேசி-யைச் சேர்ந்த ஸ்கைடைவிங் வீரர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. விபத்திற்கான காரணம் விசாரணையில் உள்ளது. மிசூரியில் உள்ளூர் நேரப்படி காலை சுமார் 11:30 மணியளவில் விபத்து நடந்தபோது அந்த விமானத்தில் 12 பேர் இருந்ததை நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக பேட்ஸ் கவுண்டி ஷெரிப் (Bates County Sheriff) சாட் ஆண்டர்சன் தெரிவித்தார். பட்லர் மெமோரியல் விமான நிலையத்திலிருந்து ஸ்கைடைவிங் பணிக்காக அந்த விமானம் இயக்கப்பட்டதாகவும், அதில் இருந்த பயணிகள் சிலர் ஸ்கைடைவிங் செய்யத் தயாராகிக் கொண்டிருந்ததாகவும் ஆண்டர்சன் உறுதிப்படுத்தினார். விபத்து நடந்தபோது அங்கு குடும்பத்தினர் சிலர் அதை நேரில் பார்த்ததாகவும் ஷெரிப் ஆண்டர்சன் கூறினார்.
விமான நிலைய வளாகத்திற்குள் உள்ள ஒரு வயல்வெளியில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவித்தார். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) ஆகியவை இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் பணி நிலுவையில் உள்ளதால், அவர்களின் பெயர்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
