×

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: பார்சல் நிறுவனங்களில் புக்கிங் கட்டணம் 15 சதவீதம் உயர்வு

 

ஈரோடு: பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பார்சல் நிறுவனங்களில் புக்கிங் கட்டணம் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 6 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.20, ஒரு லிட்டர் டீசல் ரூ.99.98க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வால் பொதுமக்களின் அத்தியவாசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பார்சல் நிறுவனங்களில் 15 சதவீதம் அளவிற்கு புக்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து சென்னைக்கு 10 கிலோ பார்சலுக்கு 175 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு – திருச்சி இடையேயான கட்டணம் ரூ.150ல் இருந்து, ரூ.170ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு-கோவைக்கு இடையேயான கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.125ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து பார்சல் நிறுவன உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘லாரிகளில் டன் கணக்கில் புக்கிங் செய்யும் பொருட்களுக்கு 2 முதல் 5 சதவீதம் வரை மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த அளவில் 10க்கும் குறைவான பார்சல்களை புக்கிங் செய்பவர்களுக்கு மட்டும் 15 சதவீத வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம்’’ என்றனர்.

Tags :
× RELATED புதுச்சேரியில் தவறவிடப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான 240 செல்போன்கள் மீட்பு!!