×

மாற்றம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் தவெகவின் முகமூடியை கிழித்த 31 நாட்கள்: திமுக ஐ.டி. விங் விமர்சனம்

சென்னை: மாற்றம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் தவெகவின் முகமூடியை கிழித்த 31 நாட்கள் என திமுக ஐ.டி. விங் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; தமிழ்நாட்டின் முதலமைச்சராக திரு. விஜய் அவர்கள் பதவியேற்று 31 நாட்கள் கடந்துவிட்டன. “மாற்றம்” என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி வாங்கிய அதிகாரத்தில், இந்த ஒரு மாத காலத்தில் தமிழ்நாடு கண்டது என்ன? ரத்தக்களரியான சட்டம்-ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள், இருண்ட தமிழகம், விண்ணை முட்டும் விலைவாசி, தவெக தொண்டர்களின் அதிகார மமதை மற்றும் எதற்கெடுத்தாலும் மற்றவர்களைக் கைகாட்டும் கோழைத்தனமான தலைமை!

இதுதான் நீங்கள் வாக்களித்த மக்களுக்குத் தரும் மாற்று அரசியல் பரிசா? இந்த ஒரு மாதகால செய்திகளைப் பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது. 35-க்கும் மேற்பட்ட படுகொலைகள், அதில் 4 இரட்டை கொலைகள் நடந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 25-க்கும் மேற்பட்ட கொடூர குற்றங்கள் நடந்துள்ளதாகவும் அதிலிருந்து தெரிய வருகிறது. சிங்கப்பெண் படை என்று மேடையில் வெற்று பில்டப் கொடுக்கும் அதே வேளையில், உங்கள் கட்சியின் நிர்வாகி சென்னையில் சிறுமியைச் சிதைத்த போக்சோ வழக்கிலும், உங்கள் தவெக இளைஞரணி நிர்வாகிகள் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் பெண்ணுக்குப் போதை மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலும் கைதாகியுள்ளனர்.

உங்கள் கட்சியின் பிரமுகர்களே பாலியல் கொடூரர்களாக உலாவரும்போது, பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேச உங்களுக்கு என்ன தார்மீக அருகதை இருக்கிறது? இதைவிடக் கேவலமான அவமானம் வேறு என்னவாக இருக்க முடியும்? தவெக நிர்வாகிகளின் இந்த வக்கிர புத்தி ஏதோ தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. உங்களின் Abusive Warriors செய்யும் அசிங்கமான இணையக் கலாச்சாரம், ஆட்சி அதிகாரம் வந்த திமிரில் தெருவுக்கும் வந்ததின் அப்பட்டமான வெளிப்பாடு இது! தவெக அரசை நோக்கி ஒரு நியாயமான கேள்வி கேட்டாலோ, விமர்சித்தாலோ, உடனடியாக வீட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது, தரம் தாழ்ந்து தாக்குவது, கொலை மிரட்டல் விடுவது என ஒரு மாஃபியா கூட்டத்தையே வளர்த்து வைத்துள்ளீர்கள்.

ஊடகவியலாளர்கள், கட்சியிலிருந்து விலகிய முன்னாள் உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் என எவரையும் விட்டுவைக்காமல் பாய்ந்து குதறும் இந்த அராஜக கும்பலை அடக்கத் துப்பற்ற அரசாக உங்கள் அரசு செயல்படுகிறது. கோடை வெயிலில் மக்கள் தவியாய்த் தவிக்கும்போது, சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு! மறுபுறம் எம்-சாண்ட், ஜல்லி, சிமெண்ட், ஸ்டீல், உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டி நிற்கிறது. இது போதாதென்று, தவெக தொண்டர்கள் செய்யும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. ஆய்வு என்ற பெயரில் அதிகார துஷ்பிரயோகம் செய்வது, அரசு அலுவலகப் பணிகளைத் தடுத்து நிறுத்தி சமூக வலைதளங்களுக்காக Reels எடுத்துப் பெருமை பீற்றுவது என ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பும் கேலிக்கூத்தாகிவிட்டது.

மாநிலமே பற்றி எரியும்போது, மாநிலத்தின் முதலமைச்சர் என்ன செய்கிறார்? இன்றுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட நடத்த தைரியமில்லாமல், மக்களைச் சந்திக்கத் திராணியில்லாமல் கேமராக்களுக்கு முகம் காட்டாமல் ஓடி ஒளிந்துகொள்கிறார்! அமைச்சர்களிடம் கேட்டால் No Comments என்று தப்பியோடுகிறார்கள். தங்களின் கையாலாகாத்தனத்தை மறைக்க, ஒவ்வொரு தோல்விக்கும் முந்தைய ஆட்சியாளர்களைப் பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். தவெக அரசு தனது Abusive Warriors குண்டர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், வெற்று PR Stuntகளை வைத்துக்கொண்டும் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றலாம் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல!

முதலமைச்சர் விஜய் அவர்களே, உடனடியாக மக்கள் மன்றத்திற்குப் பதில் சொல்லுங்கள்! சீரழிந்த சட்டம் ஒழுங்கை மீட்டெடுங்கள்! பழியைத் தூக்கிப் போடுவதை நிறுத்திவிட்டு, நேர்மையாகப் பொறுப்பேற்று ஆட்சி செய்யுங்கள்! மக்களின் குரல் ஒருபோதும் அடங்கப் போவதில்லை. இது வெறும் தொடக்கம் மட்டுமே! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Taweka ,Chennai ,Dimuka I. D. Wing ,Chief Minister of ,Tamil ,Nadu ,Vijay ,
× RELATED அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் நகர்...