×

சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வுக்கு செல்போனில் கொலைமிரட்டல் எஸ்.பி.யிடம் புகார்

நாகர்கோவில், மார்ச் 7: தொலைபேசியில் அழைத்து தனக்கு தொடர்ந்து  கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ குமரி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ குமரி மாவட்ட எஸ்.பி.யிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் இருந்து வருவதுடன் கடந்த பல ஆண்டுகளாக குமரி மாவட்ட திமுக செயலாளராக இருந்து மக்கள் பணியாற்றி வருகிறேன். 10 ஆண்டுகள் தமிழக அமைச்சராகவும் இருந்து மக்கள் பணியாற்றியுள்ளேன். கடந்த 4ம் தேதி மாலை 4 மணிக்கு எனது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் நான் எழுத்தாளர் மூர்த்தி, மேல்மருவத்தூரில் இருந்து பேசுவதாக சொல்லி என்னை அசிங்கமாகவும், கேவலமாகவும் பேசி மிரட்டினார்.

நான் யாரோ பேசுகிறார் என்று நினைத்து அதனை பெரிதாக்கவில்லை. 5ம் தேதியும் அதே நம்பரில் இருந்து காலை, பகல் என்று ஐந்து முறை தொடர்ச்சியாக போன் செய்து ‘இந்த முறை எலக்ஷனில் நின்றால் உன்னை அட்ரஸ் இல்லாமல் ஆக்கிவிடுவேன், நான் எழுத்தாளராகும், அசிங்கமாகவும், அவதூறாகவும் எழுதி உனது பெயரை டேமேஜ் பண்ணிவிடுவேன்’ என்று சொல்லி கொலை மிரட்டல் விடுத்தார். நான் அந்த போன் எண்ணை துண்டித்துவிட்டேன். தொடர்ந்து பகல் 12 மணிக்கு வேறு எண்ணில் இருந்து போன் செய்து என்னை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்ததுடன் தொடர்ந்து போனில் பேசி மிரட்டி வருகிறார். இந்த செல்போன் எண்களையும் பிளாக் செய்த பின்னரும் அடுத்த நம்பரில் இருந்து மிரட்டி வருகிறார். மார்ச் 5ம் தேதி மாலை மீண்டும் 4 முறை வேறு எண்ணில் இருந்து எனக்கு போன் பண்ணினார்.

 மீண்டும் எனக்கு போன் செய்து ‘நம்பரை பிளாக் பண்ணினா உன்னிடம் பேச முடியாதா?’ ‘என்னிடம் ஏகப்பட்ட நம்பர் இருக்கு உன்னை எலக்ஷன் வரும் வரை நிம்மதியாக தூங்கவிடமாட்டேன்’ என்றும் மிரட்டினார். அதன்பிறகு அந்த நம்பரையும் பிளாக் செய்துவிட்டேன் மூன்று எண்களில் இருந்து பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாகர்கோவில் நேசமணி நகர் போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வை அழைத்த நபர் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sureshrajan ,MLA ,SP ,
× RELATED போக்குவரத்து பாதிப்பு...