×

தமிழகத்திற்கு வராமல் ஆந்திரா செல்லும் ரூ.29,000 கோடி முதலீடு.! தவெக அரசுக்கு கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டிற்கான ரூ.29,000 கோடி முதலீடு ஆந்திர மாநிலத்திற்கு செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே முதலீடு போடப்பட்ட ஒப்பந்தங்களை தக்கவைக்க தவெக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தொழில் முனைவோர் வலியுறுத்தி உள்ளனர்.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கப்பல் கட்டும் நிறுவனமான மஸகான் டாக் ஷிப்பில்டர்ஸ் (Mazagon Dock Shipbuilders), தூத்துக்குடியில் ரூ.29,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முந்தைய திமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திற்கு பதிலாக ஆந்திராவில் முதலீடு செய்ய மஸகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

திருப்பதியில் உள்ள துகராஜபட்டினத்தில் கப்பல் கட்டும் கட்டமைப்பை ஏற்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்து உள்ளது. எனவே துகராஜபட்டினம் கப்பல் கட்டும் திட்டத்திற்கு ரூ.23,800 கோடியை முதலீடு செய்ய மஸகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கடல்சார் கட்டமைப்பை உருவாக்கும் வகையில் ரூ.5,289 கோடி முதலீடு செய்யவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதே போல் கப்பல் கட்டும் தொழிலுக்கான துணை தொழில்களில் ரூ.2,000 கோடி முதலீடு செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்தான் திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி, தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு தற்போதைய தவெக அரசு கொண்டுவருமா என கேள்வி எழுந்துள்ளது. சுமார் ரூ.29,000 கோடி முதலீடு ஆந்திராவிற்கு செல்வது என்பது தமிழகத்திற்கு உண்மையில் பேரிழப்பு என்று தொழில்முனைவோர் கூறி இருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் இருக்கும் அரசு தனிப்பெரும் பெரும்பான்மையுடன், சில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்து உள்ளதால் புதிதாக தமிழகத்தில் தொழில் தொடங்க வருவோருக்கு இந்த அரசு நீடிக்குமா என்ற சந்தேகம் வலுவாக இருக்கும். சுருக்கமாக சொன்னால் எந்த மாநிலமாக இருந்தாலும் நிலையான அரசு இல்லாவிட்டால், அந்த மாநிலத்திற்கு வரும் முதலீடுகள் குறைந்து, வேறுமாநிலத்திற்கு சென்று விடும். இதுபோல நிகழாமல் இருக்க உரிய வாக்குறுதிகளை கொடுப்பதோடு, அவர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களும் நிறைவேறும், புதிய முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று தொழில்த்துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தமிழக அரசுடன் கையெழுத்திட்ட Mazagon நிறுவனம், இங்கு வராமல் தற்போது ஆந்திரா பக்கம் திரும்பியுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்காவிட்டாலும், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களை தக்கவைக்க தவெக அரசு முயற்சிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

பிற கட்சி MLA-க்களை இழுப்பதில் காட்டிய வேகத்தை, முதலீடுகளை தக்க வைப்பதில் தவெக அரசு காட்டவில்லை என்றும், இதற்கும் வழக்கம் போல பழியை தூக்கி என் மேல் போடுகிறார்கள் என்று முதல்வர் விஜய் புலம்புவாரா என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

 

Tags : Andhra Pradesh ,Tamil Nadu ,Chennai ,Dimuka ,Atamuka ,Entrepreneurs ,Government of Tekka ,
× RELATED சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை...