மும்பை: பாலிவுட் நடிகை ஷஹானா கோஸ்வாமி தான் பலருடன் ஒரே நேரத்தில் காதல் உறவில் இருப்பதாகவும், தன்னிடம் எந்த ரகசியமும் இல்லை என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு வெளியான ‘ராக் ஆன்!’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி பிரபலமான நடிகை ஷஹானா கோஸ்வாமி, பிரபல நடிகர் மிலிந்த் சோமனை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2013ம் ஆண்டு பிரிந்தனர்.
தங்களின் காதல் பிரிந்தாலும், இறுதிவரை ஒருவரையொருவர் நேசித்ததாகவும், தங்களுக்குள் வெவ்வேறு எதிர்பார்ப்புகள் இருந்ததால் பிரிய நேரிட்டதாகவும் ஏற்கனவே அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது தனது காதல் வாழ்க்கை குறித்து யூடியூப் நேர்காணல் ஒன்றில் ஷஹானா கோஸ்வாமி அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘நான் யாருடனும் ஒரே ஒரு காதல் உறவில் இருக்கவில்லை. ஒரே நேரத்தில் பலருடன் திறந்த உறவில் (ஓபன் ரிலேஷன்ஷிப்) இருந்து வருகிறேன்.
காதல் என்பது எப்போதும் சுதந்திரமானதாக இருக்க வேண்டும்; என்னுடன் பழகும் நபர்களுக்கு நான் மற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பது நன்றாகவே தெரியும் என்பதால் எங்களுக்குள் எந்த ரகசியமும் இல்லை. இந்த உறவில் பொறாமை போன்ற உணர்வுகளைக் கையாள்வதற்கு அதிக மன முதிர்ச்சி தேவை’ என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
