* தமிழ்நாட்டில் குரு பகவானுக் கென்று நவகிரக சாந்நித்ய உள்ள திருக்கோயில் ஆலங்குடி ஆகும். அந்த குரு ஞான தட்சிணாமூர்த்தியாக பல ஊர்களிலும் வீற்றிருக்கிறார். தியான ரூபியாகவும், தியான ரூபமாகவும் உள்ள குரு சந்நதிகளை நாம் அறிந்து தரிசித்துப் பலன் பெறுவோம்.
* மயிலாடுதுறை காவிரிக்கு வடகரையில் வள்ளலார் கோயிலில் மேதா தட்சிணா மூர்த்தியாக யோகாசனத்தில் ஞான முத்திரை காட்டி அமர்ந்துளளார். நந்தி தேவனுக்கு இறைவனைத் தாங்குபவன் நான் என்ற செருக்குண்டாக அதை அடக்கினார். வியாழன் தோறும் இவருக்கு தங்கக் கவசம் சாத்துகிறார்கள்.
* திருநெல்வேலி மாவட்டம் கழுகு மலையில் ஒரு கையை தரையில் ஊன்றியபடி சற்று சாய்ந்தவாறு விஸ்ராந்தியாக போதனை செய்யும் விதமாக தட்சிணா மூர்த்தி காட்சி தருகிறார்.
* மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் திருக்கண்டியூரிலும் தட்சிணா மூர்த்தி உருவில், ஆகிருதியில் பெரிய ரூபியாய் அருள்பாலிக்கிறார்.
* விழுப்பும் மாவட்டம் திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் ஆலயத்தில் நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் தட்சிணா மூர்த்தி காட்சியளிக்கிறார். ரிஷபத்தின் மீது கையை ஊன்றிய படியும், இடது கையில் சுவடி ஏந்தியபடியும் அபூர்வமான தோற்றத்தில் காட்சிதருகிறார்.
* சென்னை – பெரியபாளையம் பாதையில் உள்ளது. திருக்கண்டலம் எனும் திருத்தலம் இங்கு அம்பிகையுடன் காட்சி தருகிறார் தட்சிணா மூர்த்தி. இவர் ‘சக்தி தட்சிணா மூர்த்தி’ என்றழைக்கப்
படுகிறார்.
* வாணியம்பாடி திருத்தலத்தில் மேற்கரத்தில் ஜெப மாலை, மற்றும் அமுத கலசமும், முன் வலதுகரத்தில் சின்முத்திரை, இடது கரத்தில், புத்தகமும் நிகழ அம்பிகையை அணைத்த கோலத்தில் காட்சி தருகிறார் ‘சக்தி தட்சிணாமூர்த்தி’ இதில் ஆலமரம் மற்றும் முயல்கள் இல்லை. இது ஒரு பஞ்சலோக படிமம் ஆகும்.
* திருமங்கலக்குடி திருத்தலத்தில் தெற்குப்பிராகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி விக்ரகத்தைத் தட்டிப் பார்த்தால் கணீரென்று வெண்கல மணிச் சத்தம் கேட்கிறது. அதனால் இந்தத் தட்சிணா மூர்த்திக்கு ‘நாதகுரு தட்சிணா மூர்த்தி’ என்று பெயர்.
* விருதுநகருக்கும், ராமநாதபுரத்திற்கும் இடையே ஓடும் குண்டாற்றின் தென் கரையில் அமைந்துள்ள தண்டலமாணிக்கம் திருத்தலத்தில் உள்ள கயிலாசநாதர் ஆலயத்தில் தட்சிணா மூர்த்தி உள்ளார். இவரது சந்நதியில் சர்ப்பதோஷ நிவர்த்திக்காக அர்ச்சனை செய்யப்படுகிறது.
* காஞ்சி ஏகாம்பரேஸ்வர் கோயிலில் உள்ள தட்சிணா மூர்த்தியின் ஜடாமகுடத்தில் அபூர்வமாக மூன்றாம் பிறைச் சந்திரன் காணப்படுகிறது.
* திருச்சி மலைக் கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலில் தட்சிணா மூர்த்தி வடிவம் ஆறு சீடர்களுடன் காட்சியளிக்கிறது. மற்ற தலங்களில் சனகாதி முனிவர்கள் எனும் சீடர்கள் நால்வரே இருப்பார்கள்.
* காசி மாநகரில் உள்ள ‘அனுமன் காட்டி’ல் உள்ள சக்ரலிங்கேஸ்வர ஆலயத்தில் ‘அர்த்தநாரீஸ்வரர் தட்சிணா மூர்த்தி உற்சவர் திருமேனி சிறப்பானது.
* திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலின் வெளிப்புறம் யோகீஸ்வரர் திருமடத்தில் உள்ள மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி வடக்கு நோக்கி காட்சி தருகிறார்.
* ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி என்னும் ஊரில் ஐயப்பன் போல திருக்கோலம் கொண்டு வீற்றிருக்கிறார் தட்சிணா மூர்த்தி.
* கர்நாடகாவில் மைசூருக்கு அருகில் உள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் வீணை கையில் கொண்டு ‘வீணா தட்சிணா மூர்த்தியாய் காட்சி தருகிறார்.
கிருஷ்ணா
